சென்னை: எல்லைப் பாதுகாப்புப் படையில் பணிக்குச் சேர்ந்து சாதனை படைக்கவும் வாய்ப்புகள் உண்டு என்று துறை சார்ந்த அதிகாரிகள் கூறினர்.
தேசத்தின் பாதுகாப்புத் துறையிலுள்ள வேலைவாய்ப்புகளை 10, 11, 12-ம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவர்கள் அறிய செய்யும் நோக்கில் ‘இந்து தமிழ் திசை’ சார்பில் ‘தேசம் காக்கும் நேசப் பணிகள்’ எனும் வெப்பினார் தொடர் நிகழ்வு நடத்தப்பட்டது. இந்நிகழ்வை சாய்ராம் கல்வி நிறுவனமும், ஆர்.எம்.கே. கல்வி நிறுவனமும் இணைந்து வழங்கின.
இந்த இணையவழி தொடர் நிகழ்வின் 9, 10-ம் பகுதிகள் கடந்த சனி, ஞாயிறு (பிப். 11, 12) ஆகிய இரு நாட்களில் நடைபெற்றன.
மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் டிஐஜி எம்.தினகரன், ‘சிறப்புப் பாதுகாப்பு குழு (SPG), மற்றும் தேசிய பாதுகாப்பு காவலர் படை (NSG) ஆகியவற்றில் வேலைவாய்ப்புகள்’ எனும் தலைப்பில் பேசியதாவது; மும்பை தாக்குதலின்போது தேசிய பாதுகாப்பு காவலர் படையின் விரைவான செயல்பாட்டின் மூலமாக தீவிரவாத செயல்பாடுகள் முறியடிக்கப்பட்டன என்றார்.
எல்லைப் பாதுகாப்புப் படையின் ஓய்வுபெற்ற கமாண்டன்ட் டி.மணி, ‘எல்லைப் பாதுகாப்புப் படையிலுள்ள (BSF) வேலைவாய்ப்புகள்’ எனும் தலைப்பில் பேசியதாவது; உலகிலேயே மிகப் பெரிய எல்லைப் பாதுகாப்புப் படையாக நமது பாதுகாப்புப் படை இருக்கிறது. எல்லைப் பாதுகாப்புப் படையில் பணிக்குச் சேர்ந்து சாதனை படைக்கவும் வாய்ப்புகள் உண்டு என்றார்.
இந்த இரு வெப்பினார் நிகழ்வுகளை ராணுவ விஞ்ஞானியும் அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு ஒருங்கிணைத்து, கலந்துரையாடியபோது கூறியதாவது; பாதுகாப்புப் படையில் பணியாற்ற நேரடியான பணி நியமனம் இல்லை என்றாலும் அதற்கு தகுதியான உடல் தகுதி மற்றும் பிற தகுதிகளுடன் இருப்பவர்களால் இந்த குழுவில் சேர முடியும். அண்டை நாடுகளுடன் போர் நிகழும் காலங்களில் எல்லையில் நமது இந்திய ராணுவம் செயலாற்றும். மற்ற காலங்களில் நமது எல்லையைக் காக்கும் காவல் பணியை எல்லைப் பாதுகாப்பு படை சிறப்பாக செய்து வருகிறது என்றார்.
இந்நிகழ்வை ‘இந்து தமிழ் திசை’ முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன் தொகுத்து வழங்கினார். இந்த இரு நாள் நிகழ்வுகளையும் தவற விட்டவர்கள் https://www.htamil.org/Session9,
https://www.htamil.org/Session10 என்ற லிங்குகளில் பார்த்துப் பயன்பெறலாம்.