விருதுநகர்: விருதுநகரில் இன்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் உடல் தகுதித் தேர்வில் 400 பேர் பங்கேற்றனர்.
சீருடைப் பணியாளர் தேர்வு குழுமத்தால் காலியாக உள்ள 2-ம் நிலைக் காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பு வீரர் பதவிக்கு மொத்தம் 3,552 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் இத்தேர்வுக்கு 16,739 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில், 13,877 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 689 பேர் தேர்ச்சி பெற்றனர்.
தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடல் தகுதித் தேர்வு விருதுநகரில் உள்ள கே.வி.எஸ். மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இன்று தொடங்கி 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இன்று நடைபெற்ற உடல் தகுதித் தேர்வில் 400 பேர் பங்கேற்றனர். இவர்களுக்கு முதல்கட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது.
அப்போது, 10-ம் வகுப்பு சான்றிதழ், சாதிச் சான்றிதழ், முன்னாள் படைவீராக இருந்தால் அதற்கான சான்றிதழ், என்சிசி சான்றிதழ், என்.எஸ்.எஸ் சான்றிழ், விளைாட்டு போட்டிகளில் பங்கேற்றதற்கான சான்றிதழ்கள், 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் ஆகியவை சரிபார்க்கப்பட்டன.
அதைத்தொடர்ந்து எடை, உயரம், மார்பளவு போன்றவை அளவிடப்பட்டது. தொடர்ந்து 1,500 மீட்டர் ஓட்டத் தேர்வும் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசபெருமாள் தலைமையில் உடல் தகுதி தேர்வு நடைபெற்றன. இப்பணிகளை மதுரை சரக டிஐஜி பொன்னி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து 9-ம் தேதி வரை உடல் தகுதி தேர்வுகள் நடைபெறுகின்றன.