வேலூர்: வேலூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆள் தேர்வு முகாம் நாளை நடைபெறவுள்ளது. வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நாளை (28-ம் தேதி) காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை முகாம் நடைபெறவுள்ளது.
இதில், ஓட்டுநர் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆண், பெண் இருபாலரும் 24 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து 3 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும். பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து ஓராண்டாகி இருக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.15,235 ஆகும்.
உதவியாளர் பணிக்கு...
அதேபோல், மருத்துவ உதவியாளர் பணிக்கு பி.எஸ்.சி நர்சிங், டி.ஜி.எம்., அல்லது ஏ.என்.எம்., டி.எம்.எல்.டி., அல்லது பி.எஸ்.சி., விலங்கியல், தாவரவியல், உயிரி வேதியியல், நுண்ணுயிரியல், உயிரி தொழில்நுட்பம் படித்திருக்க வேண்டும். ஆண், பெண் இருபாலரும் 19 முதல் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மாதச் சம்பளம் 15,435 ஆகும். முகாமில் பங்கேற்பவர்கள் தங்களுடைய கல்விச் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், அனுபவம் உள்ளிட்ட அசல் ஆவணங்களுடன் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.