பிரதிநிதித்துவப் படம் 
வேலை வாய்ப்பு

ஒரு லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் திருப்பூரில் பிப்ரவரி மாதம் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

செய்திப்பிரிவு

திருப்பூர்: திருப்பூர் மாநகரில் வரும் பிப்ரவரி மாதம் நடைபெறும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாமில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி அலுவலர்கள் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட தாராபுரம் நகராட்சியில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில், சுமார் 704 பேருக்கு பணி ஆணைகளும், காங்கயத்தில் 2 ஆயிரத்து 401 பேருக்கு பணி ஆணைகளும் வழங்கி சிறப்பிக்கப் பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக திருப்பூர்மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி, வேலை வாய்ப்புத் துறை ஆகியவை இணைந்து, திருப்பூரில் மாபெரும் வேலைவாய்ப்பு திருவிழாவை பிப்ரவரியில் நடத்த உள்ளது. 800-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த முகாமில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்கின்றனர். 10-ம் வகுப்பு முதல் பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, மற்றும் பட்டப் படிப்புகள், பொறியியல் படித்தவர்கள் உட்பட அனைவரும் கலந்துகொள்ளலாம். திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கலை, அறிவியல், பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரிகளில் (பாலிடெக்னிக்) இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் மற்றும் முந்தைய ஆண்டு படித்து முடித்த மாணவர்கள், தனியார் வேலை தேடி காத்திருப்போர் பங்கேற்கலாம்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவு, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலமாக வேலைவாய்ப்பு பெறுவதற்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில்முனைவோருக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பாக,வங்கிக் கடன் குறித்த வழிகாட்டுதல்கள் ஆகியவை மேற்கொள்ளப்பட உள்ளன.

இதற்கான அடிப்படை வசதிகள்உட்பட அனைத்து முன்னேற்பாடுகள் குறித்தும், துறை அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்க tirupurjobfair.in என்ற பிரத்யேக இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இது, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT