சேலம்: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வு எழுதி, முதன்மைத் தேர்விற்கு தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்டவர்கள், தங்கள் அசல் சான்றிதழ்களை அரசு இ- சேவை மையங்களில் பதிவேற்றம் செய்வதில் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே, சான்றிதழ் பதிவேற்ற நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும் என்று தேர்வர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழக அரசுத்துறைகளுக்கான பணி என்பதால், டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் பலரும் மிகுந்த ஆர்வமுடன் பங்கேற்கின்றனர். இந்நிலையில், கடந்த மே 21-ம் தேதி நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வில், தமிழகம் முழுவதும் 9 லட்சத்து 95 ஆயிரத்து 808 பேர் பங்கேற்றனர். அத்தேர்வில், 58 ஆயிரத்து 81 பேர் வெற்றி பெற்று, முதன்மை தேர்விற்கு தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான முதன்மைத் தேர்வு வரும் பிப்ரவரி 25-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதன்மை தேர்விற்காக, தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்டுள்ள அனைவரும், தங்களது கல்விச் சான்றிதழ், சாதி சான்றிதழ் உள்ளிட்டவற்றின் அசல் சான்றிதழ்களை அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ- சேவை மையங்கள் மூலமாக, டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக, அசல் சான்றிதழ்களை வரும் 16-ம் தேதிக்குள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தி உள்ளது.
இந்த நிலையில், முதன்மைத் தேர்விற்கு தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்டுள்ள அனைவரும், அரசு இ- சேவை மையங்களில் தங்கள் அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர். ஆனால், ஒவ்வொரு இ- சேவை மையத்திலும் நாளொன்றுக்கு சுமார் 20 பேருக்கு மட்டுமே, சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய முடிவதால், மற்றவர்கள் நாள் முழுவதும் காத்திருந்து அடுத்த நாள் மீண்டும் வர வேண்டியதாகிறது.
மறுநாளும் இதே நிலை தொடர்வதால், கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் அலைகழிப்பிற்கு ஆளாகி வருகின்றனர்.
இது குறித்து முதன்மை தேர்விற்கு தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களில் சிலர் கூறியதாவது:
அரசு இ- சேவை மையங்களில், வட்டார அளவில் தான் உள்ளன. எனவே, கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள், சான்றிதழ் பதிவேற்றம் செய்வதற்காக, வட்டார தலைநகரங்களுக்கு வர வேண்டியுள்ளது. ஆனால், ஒவ்வொரு இ- சேவை மையத்திலும் தினமும் குறைந்தது 50-க்கும் மேற்பட்டோர் வரும் நிலையில், சுமார் 20 பேருக்கு மட்டுமே சான்றிதழ் பதிவேற்றம் செய்கின்றனர். சர்வர் பழுது, சர்வர் தாமதம் என இ- சேவை மையங்களில் பிரச்சினை ஏற்படுகிறது.
மேலும், தேர்வர்கள் ஒவ்வொருவரிடமும் குறைந்தது 5 முதல் 10 சான்றிதழ்களை வரை உள்ள நிலையில், அவற்றை ஒவ்வொன்றாக ஸ்கேன் செய்து, பின்னர் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதால், ஒரு தேர்வரின் அனைத்து சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்வதற்கு 30 நிமிடங்கள் வரை ஆகிறது. இதனால், மற்றவர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதாகிறது.
இதனிடையே, கிராமங்களில் இருந்து வட்டாரத் தலைநகரத்திற்கு வருபவர்கள், முன்கூட்டியே வந்தாலும், நாளொன்றுக்கு 20 பேர் வரை மட்டுமே சான்றிதழ் பதிவேற்றம் செய்வதன் காரணமாக, மறுநாளும் வர வேண்டியதாகிறது. பெரும்பாலானவர்கள் இதே பிரச்சினையை சந்தித்து வருகின்றனர். தேர்வர்கள் பலரும் முதன்மைத் தேர்விற்காக, போட்டித் தேர்வு மையங்களில் பயின்று வரும் நிலையில், சான்றிதழ் பதிவேற்றத்திற்காக, அலைய வேண்டியிருப்பதால், பயிற்சியில் பங்கேற்பது பாதிக்கப்படுகிறது. எனவே, சான்றிதழ் பதிவேற்றத்தை எளிமைப்படுத்துதற்கு டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.