ராமநாதபுரத்தில் நாளை (அக்.20) ஓசூரில் இயங்கும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துக்கு பெண் பணியாளர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
ஓசூரில் செயல்பட்டு வரும் முன்னணி தொழில் குழுமமான டாடாவின் புதிய நிறுவனமான டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துக்கு பெண் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இப்பணியிடங்களுக்கான நேர்காணல் நாளை (அக்.20-ம் தேதி) ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்துக்கு அருகில் உள்ள முகம்மது சதக் தஸ்தஹிர் கல்வியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.
இதில் கலந்துகொள்ளும் பெண்கள் 2021-22-ம் ஆண்டில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது முதல் 20 வயதுக்குள் இருக்க வேண்டும். உடற்தகுதியாக உயரம் குறைந்தபட்சம் 145 செ.மீ., எடை குறைந்தபட்சமாக 43 கிலோ முதல் 65 கிலோ இருக்கலாம்.
ரூ.16 ஆயிரம் மாத ஊதியம்: தேர்வு செய்யப்படும் பெண் களுக்கு 12 நாட்கள் பயிற்சி வழங்கப்படும். பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ரூ.16 ஆயிரம் மாத ஊதியம் வழங்கப் படும். உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதிகள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்படும். மேலும் பொது சேம நல நிதி (பி.எப்), மருத்துவக் காப்பீடு, உயர்கல்வி பயில வசதி செய்து தரப்படும்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த வேலைவாய்ப்பு பெறுவதால் வேலைவாய்ப்பு அலுவலக பதவிமூப்பு எவ்விதத்திலும் ரத்து செய்யப்பட மாட்டாது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.