வேலை வாய்ப்பு

நாமக்கல்லில் அக்.14-ல் மகளிருக்கான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

செய்திப்பிரிவு

நாமக்கல் அறிஞர் அண்ணா கலை, அறிவியல் கல்லூரியில் வரும் 14-ம் தேதி பெண்களுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக ஆட்சியர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் தனியார் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் 14-ம் தேதி நடைபெற உள்ளது.

முகாமில், 2020, 2021 மற்றும் 2022-ம் கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற 18 முதல் 20 வயதுக்கு உட்பட்ட பெண்கள் கலந்து கொள்ளலாம். இதில், கலந்து கொள்பவர்கள் 145 செமீ உயரம், அதிகபட்சம் 65 கிலோ எடை இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் வேலைநாடுநர்களுக்கு 12 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும்.

மேலும், ரூ.16,557 மாதச் சம்பளம், தேவையான வசதிகளுடன் கூடிய பாதுகாப்பான தங்கும் இடவசதி வழங்கப்படும். முகாம் முற்றிலும் இலவசமாகும்.

வேலை வேண்டி விண்ணப்பிப்போர், தங்களுடைய சுய விவரம், உரிய கல்விச்சான்றுகள் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் கரோனா தொற்று நடைமுறை விதிகளான முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றி முகாமில் கலந்து கொள்ளலாம்.

மேலும், விவரங்களுக்கு 04286-222260 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும் என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT