புதுச்சேரியில் 116 யூடிசி பணியிடங்களுக்கு நாளை முதல் அக். 31 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுச்சேரியில் மொத்தம் உள்ள 56 துறைகளில் ஏ, பி, சி பிரிவுகளில் 10,501 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதில் நீண்ட காலத்துக்குப் பிறகு அண்மையில் காவல்துறை பணியிடங்கள் நிரப்பும் பணி தொடங்கியது.
முதல் கட்டமாக எல்டிசி, யூடிசி, அசிஸ்டென்ட் பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக பேரவையில் முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார். இச்சூழலில் புதுச்சேரி அரசுப் பணியாளர்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை நேற்று அறிவிப்பை வெளியிட்டது.
புதுச்சேரி சார்பு செயலர் ஜெய்சங்கர் வெளியிட்ட அறிவிப்பு விவரம்: புதுச்சேரியில் 116 யூடிசி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
குரூப்-சி பணியிடமான இதில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை பூர்வீகமாக மற்றும் வசிக்கும் தகுதியுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
இப்பதவிக்கான இடஒதுக்கீடு, கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை, ஊதியம் ஆகிய விவரங்களை அரசின் இணையத்தளங்களில் (https://recruitment.py.gov.in மற்றும் https://dpar.puducherry.gov.in) பார்க்கலாம்.
ஆட்சேர்ப்பு தளத்தில் ஆன்லைன் வழியாக நாளை (அக். 1) காலை 10 முதல் அக்டோபர் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.