சென்னை: முதுநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், தமிழ்வழி படித்தற்கான சான்றிதழ்களை ஆக.27-ம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சான்றிதழ் சரிபார்ப்பு
தமிழகத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினி பயிற்றுநர் நிலை-1 ஆகிய பணியிடங்களுக்கு நேரடி நியமனத்துக்கான கணினிவழித் தேர்வுகள் கடந்த பிப்.12முதல் 20-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 2 லட்சம் பேர் எழுதினர். இதன் முடிவுகள் ஜூலை 4-ம் தேதி வெளியிடப்பட்டது. தற்போது தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு வருகின்றன.
இதனிடையே, முதுநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் சிலர், தமிழ் வழியில்படித்ததற்கான கல்வித்தகுதி ஆவணங்களை விண்ணப்பிக்கும்போது முறையாக பதிவேற்றம் செய்யவில்லை. இதையடுத்து தமிழ்வழி படித்ததற்கான ஆவணங்களை ஆக.22 முதல் 25-ம் தேதிவரை இணையதளத்தில் பதிவேற்ற வாய்ப்பு அளிக்கப்படும் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது தொழில்நுட்ப கார ணங்களால் சான்றிதழ்களை இன்று (ஆக.24) முதல் 27-ம் தேதி வரை பதிவேற்ற வாய்ப்பு வழங்கப்படுகிறது. கூடுதல் விவரங்களை http://trb.tn.nic.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.