வேலை வாய்ப்பு

அக்னிபாதை திட்டத்தின் கீழ் இந்திய விமானப் படையில் சேர 6 நாளில் 1.83 லட்சம் விண்ணப்பங்கள்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: அக்னிபாதை திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படையில் சேர, 6 நாளில் 1.83 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

ராணுவத்தின் முப்படைகளில் 4 ஆண்டுகள் சேவையில் ஈடுபடுவதற்கான அக்னிபாதை திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதை எதிர்த்து பிஹார் உட்பட பல மாநிலங்களில் போராட் டம் நடந்தது. ரயில்கள் எரிக்கப்பட்டன. இத்திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என போராட்டக்காரர்களும், எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தின.

ஆனால், மத்திய அரசு தனது முடிவில் உறுதியாக இருந்தது. அக்னிபாதை திட்டத்தின் கீழ் வீரர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை சில தினங்களுக்கு முன் இந்திய விமானப்படை அறிவித்தது. இதற்கான https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் 6 நாளில் 1 லட்சத்து 83 ஆயிரத்து 634 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த இணையதளத்தில் விண்ணப்பிக்க ஜூலை 5-ம் தேதி கடைசி நாள் என ட்விட்டரில் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. இதற்கான வயது உச்சவரம்பு இந்தாண்டு 23-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படுவோரில், 25 சதவீதம் பேர் 4 ஆண்டுகளுக்குப் பின் விமானப் படையில் நீண்ட காலப் பணியில் வைத்துக் கொள்ளப்படுவர். மற்றவர்களுக்கு துணை ராணுவப் படையில் சேர முன்னுரிமை அளிக்கப்படும். அக்னி வீரர்கள் மாநில காவல்துறையில் சேரவும் முன்னுரிமை அளிக்கப்படும் என பாஜக ஆளும் மாநிலங்கள் பல அறிவித்துள்ளன. அக்னிபாதை திட்டத்தின்கீழ் வீரர்களை தேர்வு செய்யும் பணியை இந்திய ராணுவம் மற்றும் கடற்படை ஆகியவை அடுத்த மாதம் தொடங்குகின்றன.

SCROLL FOR NEXT