புதுடெல்லி: நான்கு ஆண்டு ராணுவ பணி முடித்து வெளிவரும் அக்னி வீரர்களுக்கு தங்கள் நிறுவனத்தில் வேலை தரப்படும் என முதலில் மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா அறிவித்தார்.
இவரைத் தொடர்ந்து ஆர்பிஜி குழுமத் தலைவர் ஹர்ஷ் கோயங்கா அறிவித்தார். மூன்றாவதாக தற்போது பயோகான் தலைவர் கிரண் மஜும்தார் ஷாவும் அக்னி வீரர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை தரப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அப்பல்லோ மருத்துவமனை, டிவிஎஸ் குழும நிறுவனங்களும் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பதிவில், அக்னி பாதை திட்டத்தை எதிர்த்து நாட்டின் சில பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நிகழ்வது வேதனையளிப்பதாகவும், நான்கு ஆண்டு பணி முடித்து வரும் அக்னி வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க தங்கள் நிறுவனம் தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
அக்னி வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க தங்கள் நிறுவனம் தயாராக உள்ளது என்றும் பிற நிறுவனங்களும் இதுபோல வாய்ப்பு வழங்க முன்வரும் என்றும் இத்தகைய இளைஞர்களுக்கு வளமான எதிர்காலம் இருப்பதாக தனது ட்விட்டர் பதிவில் ஹர்ஷ் கோயங்கா குறிப்பிட்டுள்ளார்.
அக்னி வீரர்களுக்கு தொழில் வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. இவர்களது திறமையை தங்கள் நிறுவனம் பயன்படுத்திக்கொள்ளத் தயாராக உள்ளதாக கிரண் மஜும்தார் ஷா தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் இணை நிர்வாக இயக்குநர் சங்கீதா ரெட்டி தனது ட்விட்டர் பதிவில், ராணுவத்தின் கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கத்தைக் கற்றுக்கொண்ட அக்னி வீரர்களுக்கு வேலை வாய்ப்பை தொழில்துறை தாராளமாக அளிக்கும். இவர்களது திறமையை பயன்படுத்திக்கொள்ள தொழில்துறைஒருபோதும் தயங்காது என்று குறிப்பிட்டுள்ளார்.
அக்னிபாதை திட்டம் இந்த சமூகத்தில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இது வலுமான ராணுவத்தை மேலும் வலுமிக்கதாக மாற்ற பெரிதும் உதவும். பொருளாதார வளர்ச்சியில் அக்னி வீரர்கள் மிகச் சிறப்பான பங்களிப்பை அளிக்க முடியும் என்று டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுதர்சன் வேணு குறிப்பிட்டுள்ளார்.
அக்னி பாதை திட்டத்தின்கீழ் சேர்க்கப்படும் இளைஞர்களுக்கு நான்கு ஆண்டு ராணுவ பணி வழங்கப்படும். இவ்விதம் பணியில் சேர்ந்தவர்களில் 75 சதவீதம் பேர் திருப்பி அனுப்பப்படுவர். இவர்களுக்கு முடிவில் ரூ.12 லட்சம் ரொக்கம் வழங்கப்படும். எஞ்சிய 25 சதவீதம் பேர் 15 ஆண்டுக்கால ராணுவ பணிக்கு சேர்க்கப்படுவர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. இருப்பினும் இத்திட்டத்தை வாபஸ் பெறப் போவதில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.