கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் சூலூரில் வரும் 26-ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம் மூலமாக சூலூரில் உள்ள ஆர்.வி.எஸ். கலை, அறிவியல் கல்லூரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வரும் 26-ம் தேதி காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது.
இதில் கலந்துகொள்வோர் தங்களது சுயவிவரம், கல்விச் சான்றிதழ்களின் நகல்களுடன் வரவேண்டும். இம்முகாமில் கலந்துகொள்ள வயது வரம்பு இல்லை.
இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் உற்பத்தி மற்றும் ஜவுளித் துறை, தகவல் தொழில்நுட்ப துறை, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், மருத்துவத்துறை, கல்வித்துறை, வங்கித்துறை, சேவைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த 170-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங் களுக்கு பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐடிஐ , டிப்ளமோ, மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகள், ஓட்டுநர்கள், கணினி இயக்குபவர், ஆசிரியர்கள், பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் மற்றும் தையல்பயிற்சி பெற்றவர்கள் போன்ற கல்வித்தகுதியுடைய மனுதாரர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
இம்முகாமில் தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு பணிநியமன ஆணை அப்போதே வழங்கப்படும். பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.
மேலும், இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் நிறுவனங் கள் மற்றும் வேலைநாடும் மனுதாரர்கள் www.tnprivatejobs.tn.gov.in மற்றும் www.ncs.gov.in ஆகிய இணையதளங்களில் பதிவு செய்தல் வேண்டும். இம்முகாமில் கலந்துகொள்ள அனுமதி முற்றிலும் இலவசம். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.