திருநெல்வேலி: “குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகும்” என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள அரசு கருவூலத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான வினாத்தாள் வைக்கப்படும் அறையின் பாதுகாப்பு தன்மை குறித்து அவர் நேற்று ஆய்வு செய்தார். தொடர்ந்து, திருநெல்வேலி ஆட்சியர் விஷ்ணுவுடன் ஆலோசனை மேற்கொண்ட
அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தவுள்ள குரூப்-4 தேர்வுக்கான பாடத் திட்டத்தை தயாரிக்கும் பணி ஓரிரு நாட்களில் நிறைவடையும். இத்தேர்வுக்கான அட்டவணை இம்மாத இறுதியில் வெளியிடப்படும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மீது தேர்வர்களுக்கு நம்பகத்தன்மை அதிகரித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளுக்கான வினா மற்றும் விடைத்தாள்களைக் கொண்டு செல்லும் வாகனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் எந்தெந்த தேதிகளில் தேர்வுகளை நடத்துகிறது என்பதை கணக்கில் கொண்டு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும்.
அவகாசம் முடிந்தது
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் தேர்வு எழுதுவோருக்கான ஒருமுறை விவர பதிவேட்டு கணக்குடன் (ஓடிஆர்) ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் முடிந்துவிட்டது. இதற்கான தேதியை நீட்டிக்க வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.