வேலை வாய்ப்பு

கோவை: வேலைவாய்ப்புப் பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

செய்திப்பிரிவு

கோவை: வேலைவாய்ப்புப் பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு, மீண்டும் பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்கள் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தங்களது பதிவை புதுப்பித்தல் வேண்டும். இவ்வாறு 2014, 2015, 2016-ம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை மற்றும் 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்கான பதிவுகளில் ஏற்கெனவே வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்த நிலையில், மேலும் 3 மாதங்கள் சிறப்பு புதுப்பித்தல் சலுகையை தமிழக அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை வழங்கியுள்ளது. இதுதொடர்பான அரசாணையில் தெரிவித்தபடி, இந்தச் சலுகையை பெற விரும்பும் பதிவுதாரர்கள் https://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி மார்ச் 1-ம் தேதிக்குள் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம்.

இணையம் வாயிலாக புதுப்பிக்க இயலாத பதிவுதாரர்கள் குறிப்பிட்ட தேதிக்குள் தொடர்புடைய வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்தும், பதிவு அஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்தும் புதுப்பித்துக் கொள்ளலாம். இச்சலுகை ஒருமுறை மட்டுமே வழங்கப்படும். மூன்று மாதங்களுக்கு பின் பெறப்படும் கோரிக்கைககள் நிராகரிக்கப்படும். அதேபோல, 2014-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதிக்கு முன்னர் பதுப்பிக்கத் தவறியவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT