வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் உள்ள அண்ணா அரங்கில் காவல் துறை அலுவலர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்களின் வாரிசுகளுக்கான வேலை வாய்ப்பு முகாமை டிஐஜி ஏ.ஜி.பாபு நேற்று தொடங்கி வைத்து பார்வையிட்டார். அருகில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் உள்ளிட்டோர். படம்: வி.எம்.மணிநாதன். 
வேலை வாய்ப்பு

காவலர்களின் வாரிசுகளுக்கு சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்: வேலூர் சரக டிஐஜி பாபு தொடங்கி வைத்தார்

செய்திப்பிரிவு

வேலூர்: வடக்கு மண்டலத்துக்குட்பட்ட காவல் துறை அலுவலர்கள், அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகள் மற்றும் குடும்பத்தினர்களுக்கான சிறப்பு வேலை வாய்ப்புமுகாம் வேலூர் விஐடி பல்கலையில் நேற்று தொடங்கியது.

நிகழ்ச்சியில், வேலூர் சரக டிஐஜி ஏ.ஜி.பாபு தலைமை வகித்து வேலை வாய்ப்பு முகாமை தொடங்கி வைத்தார். வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் முன்னிலை வகித்தார். காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட 10 மாவட்டங்களில் இருந்து காவல் துறையினர் குடும்பத்தினர் பங்கேற்றனர்.

இம்முகாம் நேற்று தொடங்கி இன்று வரை 2 நாட்களுக்கு நடைபெறுகிறது. நேற்று தொடங்கிய வேலை வாய்ப்பு முகாமில் மொத்தம் 1,039 காவல் துறை அலுவலர்கள், அமைச்சுப்பணியாளர்களின் வாரிசுதாரர்கள் மற்றும் அவர் களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

இது குறித்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘ வேலூர் மாவட்டத்தில் முதல் முறையாக காவல்துறை, அமைச்சுப் பணியாளர்களின் குடும்பத்தினரின் வாரிசுதாரர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

வேலூரில் நடைபெறும் முகாமில் 25 முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்கான ஆட்களை தேர்வு செய்கின்றனர். மேலும், வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்பு இருந்தால் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

SCROLL FOR NEXT