சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (செப். 17) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
"சென்னை மாவட்டத்தின் கீழ் இயங்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்ட பள்ளி சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பிடத் தகுதியான பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரர் சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்டு விண்ணப்பிக்கும் மையத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தூரச் சுற்றளவுக்குள் வசிப்பவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பிக்கும் மையத்தின் பெயர் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் கல்வி, இருப்பிடம், சாதி, கணவரை இழந்தவர்கள்/ கணவரால் கைவிடப்பட்டவர் போன்ற சான்றிதழ்களின் நகல்களை இணைத்தும், ரூ.25-க்கான தபால் தலை ஒட்டிய சுய விலாசத்தை தெளிவாக எழுதிய அஞ்சல் உறையுடனும் பதிவஞ்சலில், 'ஆணையர், சமூக நலம் (ம) சத்துணவுத் திட்டத்துறை, 2-வது தளம், பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை–600 015', என்ற முகவரிக்கு செப். 25, மாலை 5 மணிக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.
நிர்ணயிக்கப்பட்டுள்ள காலக்கெடுவுக்குப் பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. தகுதியற்ற விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்படமாட்டாது.
மேலும் காலிப் பணியிட விவரங்கள், இன சுழற்சி விவரங்கள், விண்ணப்பப் படிவம் ஆகியவை www.tn.gov.in / www.middaymeal.tn.gov.in / www.tnsocialwelfare.org என்ற இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது".
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.