சென்னை: டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வில் டிப்ளமோ, ஐடிஐ கல்வித் தகுதி உடைய பதவிகளில் 1,910 காலியிடங்களை நிரப்புவதற்கான முதல்கட்டத் தேர்வு (தமிழ் தகுதித் தேர்வு மற்றும் பொது அறிவு தாள்) தமிழகம் முழுவதும் நாளை (ஞாயிறு) காலை நடைபெற உள்ளது. ஓஎம்ஆர் ஷீட் வடிவிலான இத்தேர்வை 76,974 பேர் எழுத உள்ளனர்.
இதைத்தொடர்ந்து 2-வது கட்ட தேர்வு (தொழில்நுட்பப்பாடங்கள்) செப். 7 மற்றும் 11 முதல் 15 வரை நடைபெறும். இத்தேர்வில் மைனிங் சர்வேயர், மைனிங் உதவி மேலாளர், தொல்லியல் துறை உதவிப் பொறியாளர், ஜவுளித் துறை உதவி தொழில்நுட்ப உதவியாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை பணி மேலாளர் மற்றும் இளநிலை வரைவு அலுவலர், நெடுஞ்சாலைத் துறை இளநிலை வரைவு அலுவலர், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய சர்வேயர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இளநிலை தொழில்நுட்ப அலுவலர், அரசு போக்குவரத்துக்கழக டெக்னீஷியன்கள், தமிழ்நாடு மின்பகிர்மானக் கழக (மின்சார வாரியம்) தொழில்நுட்ப உதவியாளர் (எலெக்ட்ரிக்கல்) என 58 விதமான பதவிகள் இடம்பெற்றுள்ளன. இதற்கு நேர்முகத் தேர்வு எதுவும் கிடையாது. எழுத்துத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றாலே அரசு வேலை உறுதி என்பது குறிப்பிடத்தக்கது.