சென்னை: மருத்துவ பணிகள் தேர்வு வாரியம் மூலம் அரசு மருத்துவமனைகளில் விரைவில் 2,794 செவிலியர் உதவியாளர்கள் (கிரேடு-2) நியமிக்கப்பட உள்ளனர். அதேபோல் 404 கண் மருத்துவ உதவியாளர்கள் நவம்பரில் தேர்வு செய்யப்படுகின்றனர்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்களும், அலுவலர்களும் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள் அதே போல் மருத்துவர்கள், சிறப்பு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர மருத்துவ பணியாளர்கள் எம்ஆர்பி என அழைக்கப்படும் மருத்துவ பணிகள் தேர்வு வாரியம் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
டிஎன்பிஎஸ்சியும் ஆசிரியர் தேர்வு வாரியமும் ஆண்டுதோறும் வருடாந்திர தேர்வு அட்டவணையை (Annual Planner) வெளியிட்டு வருகின்றன. இந்த வரிசையில் தற்போது மருத்துவ பணிகள் தேர்வு வாரியமும் 2025-ம் ஆண்டுக்கான வருடா்ந்திர தேர்வு அட்டவணையை முதல்முறையாக வெளியிட்டிருக்கிறது.
அதில் பதவி, காலியிடங்கள், தேர்வு முறை, தேர்வு நடைபெறும் மாதம் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 2,794 செவிலியர் உதவியாளர் (கிரேடு-2) பணியிடங்கள் வெயிட்டேஜ் முறையில் நிரப்பப்படும் என்றும் அதற்கான அரசாணையை எதிர்நோக்கி இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், 404 கண் மருத்துவ உதவியாளர்களையும் வெயிட்டேஜ் முறையில் நியமிப்பதற்கான தேர்வு வரும் நவம்பரில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, 658 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடங்களை போட்டித்தேர்வு மூலம் நிரப்புவதற்கும் ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதோடு, 60 லேப்-டெக்னீசியன்களை வெயிட்டேஜ் முறையில் நியமிப்பதற்கான தேர்வு ஆகஸ்டிலும் 74 ரேடியோகிராபர்களை வெயிட்டேஜ் முறையில் நியமிப்பதற்கான தேர்வு அக்டோபரிலும் நடக்க இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.