சென்னை: டிஎன்பிஎஸ்சி மூலம் கடந்த ஓராண்டில் 17,702 பேர் பல்வேறு அரசுப் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2500-க்கும மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) செயலாளர் எஸ்.கோபால சுந்தரராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு ‘அரசுப் பணியை எதிர்நோக்கி இருக்கும் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் 2026 ஜனவரிக்குள் டிஎன்பிஎஸ்சி வாயிலாக 17,595 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என கடந்த 2024-ம் ஆண்டு சட்டப்பேரவையில் அரசு அறிவித்திருந்தது.
தேர்வர்களின் நலன் கருதி டிஎன்பிஎஸ்சி, தேர்வு பணிகளை துரிதப்படுத்தி 2024 ஜூன் முதல் 2025 ஜூன் வரை பல்வேறு அரசு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு 17,702 பேரை தேர்வு செய்துள்ளது. தமிழக அரசு 2026 ஜனவரி வரை நிர்ணயித்த இலக்கை டிஎன்பிஎஸ்சி 7 மாதங்களுக்கு முன்பாகவே எட்டியுள்ளது. மேலும் பல்வேறு தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டு 2500-க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
குருப்6-ஏ தேர்வு: குருப்6-ஏ பணிககளில் அடங்கிய தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர் (சட்டம்-நிதித்துறை நீங்கலாக) பதவிகளை நிரப்புவதற்கான கணினிவழி சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (டிப்ளமா, ஐடிஐ கல்வித்தகுதி கொண்ட பதவிகள்) பதவிகளை (திட்ட உதவியாளர், இளநிலை வரைதொழில் அலுவலர், தொழில்நுட்ப உதவியாளர் ) நிரப்புவதற்கான 3-வது கட்ட அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஜூலை 9 மற்றும் 10-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு அழைக்கப்பட்டுள்ள தேர்வர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது’ என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.