வேலை வாய்ப்பு

சென்னை கிண்டியில் ஜூன் 27-ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்பு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை கிண்டியில் வரும் ஜூன் 27-ம் தேதி வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 20-க்கும் மேற்பட்ட பிரபல தனியார் நிறுவனங்கள் பங்கேற்க இருப்பதாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கிண்டியில் வரும் 27-ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

இந்த முகாம் கிண்டியில் இயங்கி வரும் ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது. மொத்தம் 20-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் முகாமில் கலந்து கொண்டு காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். முகாமில் 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்து தேர்ச்சி பெற்ற நபர்கள் அனைவரும் பங்கேற்கலாம்.

வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள இளைஞர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் தங்களது விவரங்களை www.tnprivatejobs.tn.gov.in என்ற தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும். வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை இவ்வாய்ப்பை பயன்படுத்தி பயனடையுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT