வேலை வாய்ப்பு

தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு: மே 29, 30-ல் 2-வது கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

செய்திப்பிரிவு

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான தேர்வில் (நேர்முகத் தேர்வு இல்லாத பதவிகள்) குறிப்பிட்ட சில பதவிகளுக்கான 2-வது கட்ட அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு, மே 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் எஸ்.கோபால சுந்தர ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஒருங்கிணைந்த தொழில் நுட்பப் பணிகளில் (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) அடங்கிய பதவிகளுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு அதில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல், கடந்த பிப்ரவரி 20ம் தேதி தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

இத்தேர்வில் புள்ளியியல் ஆய்வாளர், கணினியர் மற்றும் தடுப்பூசி பண்டக காப்பாளர், உதவி நூலகர், நூலக உதவியாளர், உதவிப் பொறியாளர் (எலெக்ட்ரிக்கல்) ஆகிய பதவிகளுக்கான 2-வது கட்ட அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு மே 29, 30-ம் தேதிகளில் நடைபெறும்.

அதேபோல், ஆராய்ச்சி உதவியாளர், வட்டார புள்ளியியலாளர், செயலக அலுவலர் (சட்டம்) மொழி பெயர்ப்பாளர் ஆகிய பதவிகளுக்கான 2-வது கட்ட அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மட்டும் மே 30ம் தேதி நடைபெறும். மேற்கண்ட அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப் பட்டுள்ள தேர்வர்களின் பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டு இருக்கிறது.

இதற்கான அழைப்புக் கடிதத்தை இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டு்ம். இது குறித்து சம்பந்தப்பட்ட தேர்வர்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் வாயிலாக தகவல் தெரிவிக்கப்படும். அழைப்பாணை தனியே தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது. அசல் சான்றிதழ் சரி பார்ப்புக்கு வர தவறினால் மறுவாய்ப்பு வழங்கப்படாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT