வேலை வாய்ப்பு

சென்னையில் வேலைவாய்ப்பு திருவிழா - 792 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கல்

செய்திப்பிரிவு

சென்னையில் நடைபெற்ற வேலை வாய்ப்பு திருவிழாவில் 792 பேருக்கு பணி நியமன ஆணைகளை மத்திய இணை அமைச்சர்கள் பெம்மசானி சந்திரசேகர், துர்கா தாஸ் யுகே ஆகியோர் வழங்கினர்.

நாடு முழுவதும் 15-வது ரோஜ்கர் மேளா என்னும் வேலை வாய்ப்பு திருவிழா நேற்று நடைபெற்றது. இதில், 51 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு பிரதமர் மோடி பணி நியமன ஆணைகளை காணொலி காட்சி மூலம் வழங்கினார். சென்னையில் நடைபெற்ற வேலை வாய்ப்பு திருவிழாவில் மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஊரக மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் பெம்மசானி சந்திர சேகர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இணையமைச்சர் துர்கா தாஸ் யுகே ஆகியோர் கலந்து கொண்டு, மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 792 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர்.

எழும்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வருமான வரி, அஞ்சல் துறை, நிதித் துறை, ரயில்வே மற்றும் அரசு தொழிலாளர் காப்பீட்டு கழகம் ஆகிய துறைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 524 பேருக்கு மத்திய இணையமைச்சர் பெம்மசானி சந்திரசேகர் பணி நியமன ஆணைகளை வழங்கி, பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையில் நமது நாடு சிறப்பான வளர்ச்சியை கண்டுள்ளது. 2047ல் வளர்ச்சியடைந்த நாடாக மாற உங்களைப் போன்ற இளைஞர்களின் பங்கு முக்கியமானது.

அரசுப் பணிகளில் இன்று (சனிக்கிழமை) இணையும் இளைஞர்கள் தன்னலம் பாராமல், தேச கட்டுமானத்துக்கு பணியாற்ற வேண்டும். மேக் இன் இந்தியா, ஸ்டேண்ட் அப் இந்தியா, திறன் இந்தியா போன்ற திட்டங்கள் நாட்டில் சிறந்த மாற்றங்களை உருவாக்கியுள்ளன. பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் அதிகம் பேர் பயனடைந்துள்ளனர். இவ்வாறு அமைச்சர் அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், தமிழகம் மற்றும் புதுச்சேரி வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் பிரீத்தி கர்க், வருமான வரித்துறையின் தலைமை ஆணையர் டி சுதாகர் ராவ், தலைமை அஞ்சல் துறை தலைவர் மரியம்மா தாமஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சென்னையில் மத்திய சரக்கு மற்றும் சேவைகள் வரித் துறை ஏற்பாடு செய்திருந்த மற்றொரு நிகழ்ச்சியில், மத்திய பழங்குடியினர் நலத்துறை இணையமைச்சர் துர்கா தாஸ் யுகே கலந்துகொண்டு, 268 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் துர்கா தாஸ் யுகே பேசுகையில், "அரசுப் பணிகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு மொழி ஒரு தடையாக இருக்கக் கூடாது என்னும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு தேர்வுகளை தமிழ் உள்பட 13 இந்திய மொழிகளில் நடத்துகிறது.

தமிழக இளைஞர்கள் இதனைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பிரதமர் மோடியின் 2-வது பதவிக் காலத்தில் நடைபெற்ற வேலை வாய்ப்பு திருவிழாக்கள் மூலம் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது மூன்றாவது பதவிக்காலத்தில் நடைபெறவிருக்கும் வேலை வாய்ப்பு திருவிழாக்கள் மூலம் மேலும் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்" என்றார். இவ்வாறு அவர் பேசினார்,

நிகழ்ச்சியில், தமிழகம் மற்றும் புதுச்சேரி மத்திய சரக்கு மற்றும் சேவைகள் வரி (சிஜிஎஸ்டி) முதன்மை தலைமை ஆணையர் ராம் நிவாஸ் உள்பட பலர் பேசினர்.

SCROLL FOR NEXT