சென்னை: டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வில் (நேர்காணல் இல்லாத பதவிகள்) குறிப்பிட்ட சில பதவிகளுக்கு விடுபட்ட சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய தேர்வர்களுக்கு இறுதி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வில் (நேர்காணல் அல்லாத பதவிகள்) அடங்கிய வேதியியலாளர், இளநிலை வேதியியலாளர், காப்பாட்சியர் (வேதியியல் பாதுகாப்பு), இளநிலை பகுப்பாய்வாளர், பண்டக காப்பாளர் ஆகிய பதவிகளுக்கான காலி இடங்களில் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன. இதற்காக தேர்வர்களால் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள், ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. அவற்றில் சில முழுமையாக, சரியாக பதிவேற்றம் செய்யப்படாமல் குறைபாட்டுடன் இருப்பது கண்டறியப்பட்டது.
அத்தகைய தேர்வர்கள் விடுபட்ட சான்றிதழ்கள், ஆவணங்களை ஏப்ரல் 23-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வாய்ப்பு அளிக்கப்படுகிறது. தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) அவர்களது பதிவெண்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு குறுஞ்செய்தி, மின்னஞ்சல், குறிப்பாணை மூலமாகவும் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாணையில் கூறியுள்ளபடி, சான்றிதழ்கள், ஆவணங்களை தேர்வர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
‘அரசு உதவி குற்றவியல் வழக்கறிஞர் (கிரேடு-2) பதவிக்கான முதன்மை தேர்வு வினாத்தாள் (சட்டம் தாள் 1 முதல் 4 வரை) வடிவமைப்பு மாற்றப்பட்டுள்ளது. தேர்வாணைய இணையதளத்தில் அதற்கான மாதிரி வடிவம் வெளியிடப்பட்டுள்ளது’ என்று அவர் வெளியிட்ட மற்றொரு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.