சென்னை: அரசு ஐடிஐ முதல்வர் தேர்வில் விடுபட்ட சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய தேர்வர்களுக்கு கடைசி வாய்ப்பு அளிக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அ.ஜான் லூயிஸ் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட செய்திக் குறிப்பு: 'ஒருங்கிணைந்த பொறியியல் பணியின் கீழ் டிஎன்பிஎஸ்சி-யால் நடத்தப்பட்ட அரசு தொழிற்பயிற்சி நிலைய (ஐடிஐ) முதல்வர் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சித்துறை உதவி இயக்குநர் தேர்வில் வெற்றிபெற்று சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டிய தேர்வர்களில் சிலர் தேவையான சான்றிதழ்களை சரிவர பதிவேற்றம் செய்யாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அத்தகைய தேர்வர்கள் விடுபட்ட சான்றிதழ்களை சரியாக பதிவேற்றம் செய்ய தற்போது கடைசி வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அவர்கள் சான்றிதழ்களை அக்டோபர் 27-ம் தேதி நள்ளிரவு 11.59 மணிக்குள் பதிவேற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இதுதொடர்பான தகவல் அவர்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் வாயிலாகவும் அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாவிட்டால் அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.' இவ்வாறு அவர் கூறியுள்ளார்.