புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாமில் உதவியாளர் பணி தேர்வை பிராந்திய மொழிகளில் எழுதலாம். விண்ணப்பங்களை வரும் 30-ம் தேதி வரை அனுப்ப காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுவை அமைச்சக பதவிகளில் அசிஸ்டென்ட் எனப்படும் 1,135 உதவியாளர் பணியிடங்கள் உள்ளது. இதில் 20 சதவீதம் நேரடியாகவும், 20 சதவீதம் துறைரீதியாக தேர்வு நடத்தியும், 60 சதவீதம் பதவி உயர்வு அளித்தும் நிரப்ப வேண்டும். 12 ஆண்டுகளாக நேரடி நியமனம் நடக்கவில்லை. முதல்வர் ரங்கசாமி உத்தரவின்பேரில் கடந்த மாதம் 23ம் தேதி 256 உதவியாளர் பணிக்கு அறிவிப்பு வெளியானது.
கடந்த 20-ம் தேதி வரை விண்ணப்பம் பெறப்பட்டது. இந்த பணிக்கு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டு, விண்ணப்பிக்கும் காலக்கெடு வரும் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சார்பு செயலர் ஜெய்சங்கர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: “புதுச்சேரியில் 256 உதவியாளர் பதவிக்கான காலியிடங்களை கடந்த 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான காலக்கெடு வரும் 30-ம் தேதி மாலை 5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை புதிதாக விண்ணப்பிக்கவும், திருத்திக்கொள்ளவும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
ஆளுநர் ஒப்புதலுடன் ஓபிசி, எம்பிசி, இபிசி, முஸ்லிம், பிடி பிரிவினர் வயது வரம்பு 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வு மற்றவர்களுக்கு பொருந்தாது. தேர்வை ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய பிராந்திய மொழிகளில் எழுதலாம். இதனால் கேள்வித்தாள் ஆங்கிலத்திலும், பிராந்திய மொழியிலும் என இரண்டு மொழிகளில் இருக்கும். ஏற்கெனவே விண்ணப்பத்தை இணையத்தில் சமர்ப்பித்தவர்கள் தேர்வு எழுத தங்களின் பிராந்திய மொழியை விருப்பத்தை தேர்வு வலைத்தளத்தில் பதிவு செய்யவேண்டும்.
அவ்வாறு பிராந்திய மொழியை தேர்வு செய்யாவிட்டால், தேர்வர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த தேர்வு மையத்தை அடிப்படையாக வைத்து பிராந்திய மொழியானது துறையால் தேர்வு செய்யப்படும். கூடுதலாக உடல் ஊனமுற்றோர் பிரிவில் உட்பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது. அத்தகைய உடல் ஊனமுற்ற விண்ணப்பத்தாரர்களும் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரம் உதவி தேவைப்பாட்டால் தேர்வர்கள் 30ம் தேதி வரை 0413 2233338 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அரசு இணையதளத்தில் முழு விவரத்தை பார்க்கலாம்” என தெரிவித்துள்ளார்.