சென்னை: ஜூலை 13-ம் தேதி நடைபெற உள்ள குருப்-1 முதல்நிலைத் தேர்வுக்கான ஹால்டிக்கெட் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குருப்-1 பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு ஜூலை 13-ம் தேதி காலை நடைபெற உள்ளது. இத்தேர்வெழுத தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களின் ஒடிஆர் வாயிலாக விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம், என்று அவர் கூறியுள்ளார்.
வருவாய் கோட்டாட்சியர், டிஎஸ்பி, வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் அலுவலர் ஆகிய பதவிகளில் 90 காலியிடங்களை நேரடியாக நிரப்புவதற்காக இந்த குருப்-1 தேர்வு நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.