சென்னை: விஏஒ, வனக் காப்பாளர் உள்ளிட்ட பணிகளில் உள்ள 6,244 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (பிப்.28) முடிவடைகிறது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித்தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன. அந்தவகையில் கிராமநிர்வாக அலுவலர், வனக் காப்பாளர், இளநிலை உதவியாளர்,தட்டச்சர் உட்பட குரூப் 4 பதவிகளில் வரும் 6,244 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த ஜனவரியில் வெளியிட்டது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஜன.30-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் (பிப். 28) நிறைவு பெறுகிறது. எனவே, விருப்பமுள்ளவர்கள் /www.tnpsc.gov.in/ எனும் வலைதளம் மூலம் துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள மார்ச் 4 முதல் 6-ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்படும்.
எழுத்துத் தேர்வு ஜூன் 9-ம் தேதி காலை 9.30 முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறவுள்ளது. தமிழ் தகுதித் தாள் 100, பொது அறிவுத் தாள் 100 என மொத்தம் 200 வினாக்கள் 300 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். இதில் தமிழ் தகுதித்தாள் தேர்வில் 40 சதவீதம் மதிப்பெண் எடுத்தால் மட்டுமே பாடம் சார்ந்த மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசத்தை ஒரு வாரம் நீட்டிக்க வேண்டுமென தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.