திருப்பத்தூர்: தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ளும் வேலை வாய்ப்பு முகாம் வரும் 14-ம் தேதி ஜோலார்பேட்டையில் நடை பெறவுள்ளது என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையங்களில் தனியார் துறை வேலை வாய்ப்பு நடத்த ஆணையரகம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, திருப்பத்தூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் 14-ம் தேதி ( புதன் கிழமை ) அன்று ஜோலார்பேட்டை அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் ( சிறு விளையாட்டு அரங்கம் அருகில் ) நடைபெறவுள்ளது.
இந்த முகாமில் 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்களது நிறுவனங்களுக்கான ஆட்களை தேர்வு செய்ய இருப்பதால் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 8-ம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரையிலும், பொறியியல், மருத்துவம் சார்ந்த படிப்பு, டிப்ளமோ மற்றும் ஐடிஐ முடித்த ஆண்கள், பெண்கள் இருபாலரும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்’’ என தெரிவித்துள்ளார்.