சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2024-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள், அரசு கலை அறிவியல் கல்லூரி மற்றும் அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர்கள், வட்டார கல்வி அதிகாரிகள் (பிஇஓ), மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் டிஆர்பி எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள். அதுமட்டுமின்றி ஆசிரியர் தகுதித்தேர்வும் (டெட்) டிஆர்பி-யால் நடத்தப்படுகிறது.
ஓராண்டில் என்னென்ன போட்டித்தேர்வுகள் நடத்தப்படும், அவற்றுக்கான அறிவிப்புகள் எப்போது வெளியிடப்படும், தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பன உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி-யைப் போல் டிஆர்பி-யும் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையில் டிசம்பர் மாதத்திலேயே வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வெளியாகவில்லை.
இதனிடையே, தற்போது 2024-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆசிரியர் பணியிடங்களுக்கான டெட் தகுதித் தேர்வு ஜூலை மாதத்தில் நடைபெறும் என்றும், இதற்கான அறிவிப்பாணை ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்படும் என அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், 1,766 பணியிடங்களை கொண்ட 2ம் நிலை ஆசிரியர் பணிக்கான (SGT) தேர்வு குறித்த அறிவிப்பு இம்மாதமும், தேர்வு ஏப்ரல் மாதமும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 இடங்களுக்கான உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வு ஜூன் மாதமும், அடுத்த மாதம் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்பட்டுள்ளது.
200 இடங்கள் காலியாக இருக்கும் முதுநிலை ஆசிரியர்கள் பணிக்கு மே மாதம் அறிவிப்பு வெளியாகி, ஆகஸ்ட் மாதம் தேர்வு நடைபெறும் என்றும் அட்டவணையில் அறிவிக்கப்பட்டுள்ளது.