திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: "கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், மகளிர் திட்ட அலுவலகம் ஆகியவை இணைந்து வரும் 9-ம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை தனியார் வேலை வாய்ப்பு முகாமை நடத்துகின்றன.
இதில் 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளன. எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 2, டிப்ளமோ, டிகிரி, பொறியியல் மற்றும் தொழிற்கல்வி பெற்றவர்கள், கணினி இயக்குபவர்கள், ஓட்டுநர்கள், தையல் கற்றவர்கள் என அனைத்து வித தகுதியாளர்களும் கலந்து கொள்ளலாம்.
இதில் கலந்துகொள்ள அனுமதி இலவசம். முகாமில் பங்கேற்க www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கான பதிவு, மாவட்ட தொழில்மையத்தின் தொழில் முனைவோருக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கிக் கடன் குறித்த வழிகாட்டுதல்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை 0421-299152 அல்லது 9499055944 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.