வேலை வாய்ப்பு

உளுந்தூர்பேட்டையில் சனிக்கிழமை வேலைவாய்ப்பு முகாம்

செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, உளுந்தூர்பேட்டையில் நாளை (டிச.2) தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வேலை தேடுபர்களை தனியார் துறைகளில் பணியமர்த்தும் நோக்கத்தோடு, கள்ளக்குறிச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து இந்த வேலை வாய்ப்பு முகாமை நடத்துகிறது. உளுந்தூர்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இந்த முகாம் நடை பெறவுள்ளது.

இம்முகாமில் கணினித் துறை,தொழில் துறை, சேவைத் துறை,ஆட்டோ மொபைல் துறை, டெக்ஸ் டைல்ஸ் மற்றும் விற்பனைத் துறை என தமிழக அளவில் பல்வேறு முன்னணி தனியார் துறைகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு, தகுதி யுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்கவுள்ளனர். மேலும், அயல் நாட்டு வேலை வாய்ப்புக்கான பதிவு மற்றும் இலவச திறன் பயிற்சிக்கான பதிவுக்கும் பிரத்தியேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இத்தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி, பிளஸ் டூ, ஐடிஐ, டிப்ளமோ,அக்ரி, செவிலியர், ஆசிரியர் தகுதி, ஹோட்டல் மேனேஜ் மென்ட், இளநிலை, முதுநிலை மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு கள் போன்ற கல்வித் தகுதிகளையுடைய 18 முதல் 40 வயதுக்குட்பட்ட வேலை தேடுபவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தங்களது சுய விவர குறிப்புகளுடன் அனைத்து கல்விச் சான்றுகளின் நகல்கள், ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

மேலும் இம்முகாம் குறித்த விவரங்களுக்கு 88072 04332 அல்லது 04151 - 295422 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சார்ந்த வேலை தேடுபவர்கள்; இத்தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

SCROLL FOR NEXT