வேலை வாய்ப்பு

திறன் வாய்ந்த தொழிலாளர்களுக்கு சமர்த் திட்டத்தில் ரூ.91 லட்சம் ஊக்கத் தொகை

செய்திப்பிரிவு

திருப்பூர்: வேலை வாய்ப்பு இல்லாத தொழிலாளர்களை கண்டறிந்து, அவர்களுக்கு பயிற்சி அளித்து, வேலை வாய்ப்பை உருவாக்கி தரும் தொழிலாளர் பயிற்சி நிலையங்களுக்கு, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் ‘சமர்த்’ திட்டம் மூலமாக ரூ.91 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

திறன் வாய்ந்த தொழிலாளர்களை உருவாக்க, மத்திய அரசால் ‘சமர்த்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்க ரூ.1,300 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தின் 13 மாவட்டங்களிலுள்ள பயிற்சி நிலையங்கள் இணைக்கப்பட்டுள்ளன. மேற்கு மண்டலத்தில் திட்டத்தின் பொறுப்பாளராக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் உள்ளது.

அதில் பயிற்சி அளித்த நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்வு, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், தமிழகத்தின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பயிற்சி நிலையங்களுக்கு, ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் காசோலைகளை வழங்கினார்.

இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் சுப்பிரமணியன் கூறும்போது, "மத்திய அரசின் ‘சமர்த்’ திட்டத்தில், திறன் வளர்ப்பு பயிற்சி அளித்து, தொழிலாளர்கள் உருவாக்கப்படுகின்றனர். முதல்கட்டமாக 26 குழுக்களும், 2-ம் கட்டமாக 25 குழுக்களும் பயிற்சி பெற்றனர். இதற்காக ரூ.91 லட்சம் ஊக்கத் தொகை அளிக்கப்பட்டுள்ளது.

இதுவரை, 1,477 பேர் பயிற்சி நிறைவு செய்து வேலையில் சேர்ந்துள்ளனர். தற்போது 783 பேர் பயிற்சி நிறைவு செய்துள்ளனர். மேலும், 3,750 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர்" என்றார்.

SCROLL FOR NEXT