விருத்தாசலம்: கடலூர் மாவட்ட இளைஞர்கள் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் என்எல்சி நிறுவனத்தில் நிரந்தர வேலைவாய்ப்பை பெற்றனர். மத்திய பொதுத்துறை நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனம் கடந்த 67 ஆண்டுகளாக கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வருகிறது. நெய்வேலியில் 4 அனல்மின் நிலையங்கள், 3 பழுப்பு நிலக்கரி சுரங்கங்கள் மூலம் 3,300 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யப்படுகிறது.
இதில் 60 சதவீதம் தமிழகத்திற்கும், எஞ்சிய மின்சாரம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநிங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. இதுதவிர மரபுசாரா எரிசக்தி திட்டத்தின் கீழ் சூரிய ஒளி மூலம் 250 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்து வருகிறது.
இந்நிலையில் வேலைவாய்ப்பை வழங்குவதில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும், தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை பல்வேறு அரசியல் கட்சியினர் முன்வைத்தனர். மேலும் நிரந்தர வேலைவாய்ப்பு, ஏக்கருக்கு ரூ.1 கோடிஇழப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர்.
நெய்வேலி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன், பண்ருட்டி எம்எல்ஏ தி.வேல்முருகன் ஆகியோர் என்எல்சி நிறுவனத்தில் நிரந்தர வேலைவாய்ப்பில் தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்றும், குறிப்பாக நிலம் வழங்கியவிவசாயிகளின் குடும்பத்தில் உள்ள பட்டதாரிகளுக்கு தகுதி அடிப்படையில் நிரந்தர வேலை வழங்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் குரலெழுப்பினர்.
இதையடுத்து கடந்த மே 2-ம் தேதி தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் தலைமையில் என்எல்சி நிறுவன உயரதிகாரிகள், அமைச்சர்கள், கடலூர் மாவட்டத்தில் உள்ள எம்எல்ஏக்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போதும் வேலைவாய்ப்பில் நிலம் கொடுத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று என்எல்சி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது என்எல்சி நிறுவனம் சுரங்கவியல் தொழில்நுட்பம் (டிப்ளமோ) முடித்த இளைஞர்கள் 178 பேருக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது. 192 பணியிடங்களுக்கான தேர்வில் 178 பேர் தேர்ச்சிபெற்றனர். இதில் 176 பேர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நீண்டகால இடைவெளிக்குப் பின் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளூர் இளைஞர்களுக்கு நிரந்தரவேலைவாய்ப்பு வழங்கியது. என்எல்சியில் பணிபுரியும் ஊழியர்கள் மட்டுமின்றி என்எல்சியின் விரிவாக்கத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக என்எல்சி அதிகாரிகளிடம் பேசியபோது, “சி மற்றும் டி பிரிவில் மண்டல (தமிழ்நாடு) அளவிலேயே பணியாளர்களை தேர்வு செய்து கொள்ளும் வசதி உள்ளது. அதன்படி தான் டிப்ளமோ படித்தவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் கடந்த ஆண்டு இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, கடந்த மே 28-ம் தேதிஎழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
தேர்வானவர்களில் பெரும்பான்மையோர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும், என்எல்சிக்கு நிலம் வழங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது” என்றனர்.
எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மருத்துப் பரிசோதனை முடிந்து இம்மாதம் இறுதிக்குள் பணி ஆணை வழங்கப்படும் என தெரிகிறது.