சியோல்: ஃபோர்ப்ஸ் இதழ் 2026-ம் ஆண்டின் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், ஆன்லைன் கேமிங் ஜாம்பவானான 'நெக்சன்' நிறுவனத்தின் நிறுவனர், மறைந்த கிம் ஜுங்-ஜூவின் 22 வயது மகள் கிம் ஜுங்-யூன், தனது தந்தையின் சொத்துரிமையை பெற்றதன் மூலம் உலகின் மிக இளம் வயது தொழில்நுட்ப கோடீஸ்வரர் என்ற நிலையை எட்டியுள்ளார்.
கிம் ஜுங்-யூனின் மூத்த சகோதரி ஜுங்-மின்னும் வாரிசு அடிப்படையில் தந்தையின் சொத்துகளை பெற்றார். எனினும், இவர்கள் இருவருமே நிறுவனத்தின் அன்றாட நிர்வாக நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபடுவதில்லை. பொதுவெளியில் இவர்களைப் பற்றிய தகவல்களும் மிகக் குறைவாகவே உள்ளன. தற்போது ஜுங்-யூன் தென்கொரியாவின் ஜேஜு தீவில் வசித்து வருவதாக ஃபோர்ப்ஸ் தரவுகள் தெரிவிக்கின்றன.
நடப்பு ஆண்டில் 30 வயதிற்குட்பட்ட கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது. 30 வயதிற்கு உட்பட்ட 35 கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு 92.4 பில்லியன் டாலர் ஆகும். இவர்களில் பெரும்பாலானோர் வாரிசு அடிப்படையில் கோடீஸ்வரர்களாக இருந்தாலும், 12 பேர் சொந்த முயற்சியால் உயர்ந்துள்ளனர்.
ஏஐ ஸ்டார்ட்-அப் நிறுவனமான மெர்கர் நிறுவனத்தின் 22 வயது நிறுவனர்கள் இதில் அடங்குவர். எனினும், தொழில்நுட்பத் துறையில் இளம் வயது பெண் கோடீஸ்வரராக ஜுங்-யூன் தனித்து நிற்கிறார். இவருடன் கல்ஷி நிறுவனத்தின் லுவானா லோப்ஸ் லாரா மற்றும் ஸ்கேல் ஏஐ நிறுவனத்தின் லூசி குவோ ஆகியோரும் 30 வயதிற்குட்பட்ட பெண் கோடீஸ்வரர்கள் பட்டியலில் உள்ளனர்.