வணிகம்

ஏஐ துறையில் ‘எஃப்டிஇ’ பொறியாளர்களுக்கு ‘டிமாண்ட்’ கூடுவது ஏன்?

போத்தி ராஜ்.க

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் என்பது இன்று அனைத்து இடங்களிலும் ஊடுருவி, வேலைவாய்ப்புச் சந்தையையே மாற்றிவிட்டது. இந்த ஆண்டு மட்டும் உலகளவில் 1.20 லட்சம் ஊழியர்களை பெருநிறுவனங்களான அமேசான், மெட்டா, ஆரக்கிள், டிசிஎஸ் உள்ளிட்டவை வேலையிலிருந்து நீக்கியுள்ளன.

ஆனால், சிலிக்கான் வேலி மட்டும் மென்பொருள் துறையில் செயற்கை நுண்ணறிவை உருவாக்கும் பிரிவுகளில் சத்தமின்றி மிகவும் லாபகரமான ஒரு வேலை வாய்ப்பை உருவாகியுள்ளது. அதுதான் ‘எஃப்டிஇ’ (FTE - Forward Deployed Engineers) எனப்படும் ‘ஃபார்வேர்டு டெப்லாய்ட் இன்ஜினியர்ஸ்’ பணி.

சிக்கலான மென்பொருள்களுக்குத் தீர்வுகளை உருவாக்கவும், வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் கஸ்டமைஸ் செய்யவும், வாடிக்கையாளரின் நிறுவனத்தில் நேரடியாக இணைந்து பணியாற்றும் சிறப்பு மென்பொருள் பொறியாளர்தான் இந்த எஃப்டிஇ பொறியாளர்கள்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஏற்று செயல்படுத்துவதில் உலக அளவில் இந்தியா முன்னணியில் உள்ளது. டெலாய்ட்டின் நிறுவனங்களுக்கான ‘ஏஐ 2026’ அறிக்கையின்படி, உலகளவில் 28% நிறுவனங்கள் மட்டுமே செயற்கை நுண்ணறிவை முழுமையாகவோ அல்லது குறிப்பிடத்தக்க அளவிலோ பயன்படுத்துகின்றன. ஆனால், இந்தியாவில் 40% நிறுவனங்கள் அதை பயன்படுத்துகின்றன எனத் தெரிவித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவை பரவலாக பயன்படுத்துவதன் மூலம் வணிகம் பரவலாக வளர்ந்துவிட்டதாக மதிப்பிட முடியாது. எம்ஐடி ஸ்லோன் மேனேஜ்மென்ட் ரிவியூ மற்றும் பாஸ்டன் கன்சல்டிங் குரூப் ஆய்வில், ஏஐ பயன்பாடு மூலம் வருமானத்தை உயர்வை எட்ட சுமார் 5 சதவீதத்துக்கும் குறைவான நிறுவனங்களால்தான் முடிந்தது என்று தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, நிறுவனங்களுக்கான ஏஐ குறித்த விவாதம் என்பது அதன் செயல்திறனை மையமாக வைத்தே பேசப்பட்டு வருகிறது. ஏஐ-யின் எந்த மாதிரி (மாடல்) சிறந்தது, அதைக் கொண்டு எந்த வகையான பயன்பாட்டுக்கு முன்னுரிமை அளிக்கலாம், அதை எவ்வளவு விரைவாக ஏற்பது என்ற கேள்விகள் இதில் முன்வைக்கப்பட்டது.

செயற்கை நுண்ணறிவு சோதனை நிலையில் இருந்தபோது, இவை சரியான கேள்விகளாக இருந்தன. இப்போது அது உற்பத்தி நிலைக்கு வந்துவிட்டது. அதனால், அதன் செயல்திறனை ஆய்வு செய்வதற்கு பதிலாக, நிறுவனங்களில் செயல்படுத்தும்போது, பழைய அமைப்புகளை மாற்றுதல், வணிக ஆய்வு, வாடிக்கையாளர் தொடர்பு உள்ளிட்டவற்றுக்கு நம்பகத்தன்மையுடன் செயல்படுமா என்று பார்க்க வேண்டியது முக்கியம்.

நிதி ஒதுக்கீடு போதுமா?

எர்ன்ஸ்ட் & யங் மற்றும் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு ‘இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு சிந்தனை: 2026 கண்ணோட்டம்’ என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டது. அதில் ‘95% இந்திய நிறுவனங்கள் தங்கள் தகவல் தொழில்நுட்ப பட்ஜெட் செலவினத்தில் 20 சதவீதத்துக்கும் குறைவாகவே ஏஐ பிரிவுக்கு ஒதுக்குகின்றன. வெறும் 4% நிறுவனங்கள் மட்டுமே அதிகமாக நிதி ஒதுக்குகின்றன’ எனத் தெரிவித்துள்ளது.

வழக்கமான மென்பொருள் பொறியியல் என்பது கணிக்கக்கூடிய தன்மையை கொண்டது. எவ்வாறு உள்ளீடு கொடுக்கிறோமோ அதற்குரிய பதில் மட்டுமே கிடைக்கும். ஆனால், செயற்கை நுண்ணறிவு அவ்வாறு செயல்படுவதில்லை. அவற்றின் நடத்தை உறுதியற்ற தன்மையைச் சார்ந்தது, சூழலுக்கு ஏற்ப மாறுபட்டு பதில் அளிக்கும். ஒரு அப்டேட் அல்லது பயனர் உள்ளிடும் பிராம்ப்ட்டில் சிறிய மாற்றம் என எதுவாக இருந்தாலும், வழக்கமான மென்பொருள் செய்ய முடியாத வழிகளில் முடிவுகளை மாற்றித் தரும்.

செயற்கை நுண்ணறிவைப் பொறுத்தவரை ஒரு மாதிரியை உருவாக்குவதைவிட, வணிகச் சூழலில் அதை நம்பகத்தன்மையுடன் செயல்பட வைப்பதே சவாலாகும்.

இந்தியாவின் பொறியியல் கல்வியில் இன்னும் பெரிய அளவில் செயற்கை நுண்ணறிவு குறித்த புரிதலை, விழிப்புணர்வை உருவாக்க வேண்டியுள்ளது. ஏஐ கொடுக்கும் அவுட்புட் உண்மையில் சரியானவையா என்பதை மதிப்பிட்டு உருவாக்குவதும், மற்றும் உறுதியற்ற தன்மையை பற்றி புரிந்து கொள்வதும் அவசியம்.

எப்டிஇ பொறியாளர்களுக்கு வேலை

செயற்கை நுண்ணறிவு துறையில் ஓபன் ஏஐ, ஆந்த்ரோபிக், பிளான்டிர், டேட்டா பிரிக்ஸ் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள், தற்போது எஃப்டிஇ பொறியாளர்களை நியமித்து வருகிறார்கள். இந்த எஃப்டிஇ பொறியாளர்கள் பணி என்பது செயற்கை நுண்ணறிவு தயாரிப்பு, மேம்பாடு மற்றும் வாடிக்கையாளர் தரப்பிலான தொழில்நுட்பச் செயலாக்கம் ஆகியவற்றை செய்வதாகும். வாடிக்கையாளரின் தொழில் சூழல், தகவல்கள் மற்றும் நிபந்தனைகளுக்கு ஏற்ப அந்த அடிப்படை மாதிரிகளைச் செயல்பட வைப்பதே இவர்களின் பணியாகும்.

செயற்கை நுண்ணறிவை நிறுவனப் பணிகள் குறித்த ஆய்வுகளில் ஒருங்கிணைத்தல், நிர்வாக மேலாண்மை, செயல்திறன் மதிப்பீடு மற்றும் செயல்பாட்டை மேம்படுத்துதல் ஆகிய திறன்கள் தேவைப்படுகின்றன. இவைதான் எஃப்டிஇ பொறியாளர்களுக்குரிய மிகப் பெரிய சவால்களாக இருக்கின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரை, எஃப்டிஇ பொறியாளர்களுக்கான வேலைவாய்ப்பு என்பது அரிதானது. பொதுவான செயற்கை நுண்ணறிவுத் திறனை, வணிகத்துக்குள் நம்பகத்தன்மையுடன் செயல்பட வைக்கக்கூடிய எஃப்டிஇ பொறியாளர்களுக்கு பெரு நிறுவனங்கள் கூடுதல் ஊதியம் வழங்கத் தயாராக உள்ளன.

இந்தத் தேவை ஒரு சில தொழில்நுட்ப நிறுவனங்களில் மட்டுமின்றி வங்கி, காப்பீடு, சில்லறை வணிகம், சுகாதாரம் மற்றும் உற்பத்தித் துறைகள் அனைத்திலும் எஃப்டிஇ பொறியாளர்களுக்கான தேவை இருக்கிறது. எஃப்டிஇ பொறியாளர்கள் பணி என்பது, வாடிக்கையாளரின் அருகில் இருந்து தேவையை கவனிப்பதாகும். இந்தப் பணியைச் சிறப்பாகச் செய்யும் பொறியாளர்கள்தான், ஒரு செயற்கை நுண்ணறிவு தயாரிப்பு என்னவாக உருவாகிறது என்பதை தீர்மானிக்கிறார்கள்.

மேலும், அதன் செயல்திட்டத்தில் கவனம் செலுத்தி, குறைகளைக் கண்டறிகிறார்கள். வலுவான எஃப்டிஇ பொறியாளர் குழுக்களை உருவாக்கும் நிறுவனங்கள், தங்கள் செயற்கை நுண்ணறிவு தயாரிப்புகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அவற்றை வடிவமைக்கவும் செய்கின்றன. மாணவர்களுக்கு வழக்கமான பொறியியல் பாடத்திட்டங்கள், செயற்கை நுண்ணறிவுப் பொறியியல் செல்லும் திசையை குறிப்பிடுவதில்லை.

செயற்கை நுண்ணறிவு பரிசோதனையிலிருந்து நிறுவன அளவிலான பயன்பாட்டுக்கு நகரும்போது, பொறியியல் படித்த இளைஞர்களை, உற்பத்தி பிரிவுக்கு தயார்படுத்தும் வகையில் பொறியியல் கல்வி பரிணாம வளர்ச்சி அடைய வேண்டும்.

செயற்கை நுண்ணறிவை ஏற்றுக்கொள்வதிலும், பயன்படுத்துவதிலும் இந்தியா முன்னிலையில் இருக்கிறது. ஆனால், எவ்வளவு வேகமாக செயற்கை நுண்ணறிவை ஏற்றுக்கொள்கிறோம் என்பதை விட, அதை எவ்வளவு நம்பகத்தன்மையுடன் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே இதன் வருங்காலம் அமையும் என்கின்றனர் நிபுணர்கள்.

SCROLL FOR NEXT