வணிகம்

தங்கம், வெள்ளி விலை உச்சம் தொட்ட வேகத்தில் கடும் வீழ்ச்சி அடைவது ஏன்?

‘டாலர்’ அரசியலும், பொருளாதாரச் சூழல் பின்புலமும்

பாரதி ஆனந்த்

தங்கத்தின் விலை உயர்ந்தாலும், சரிந்தாலும் பேசுபொருள்தான். சமீப காலமாக புதுப்புது உச்சம் தொட்டு வந்த தங்கம், வெள்ளி விலை கடந்த சில நாட்களாக அதிரடியாக குறைந்து வருகிறது. அதன் பின்னணியை சற்று தெளிவாக ஆராய்வோம்.

2025 டிசம்பர் இறுதியில் தங்கம் (22 காரட்) விலை பவுன் ரூ.1,00,120 என்று இருந்தது. அதுவே 2026 ஜனவரி 29-ம் தேதி ஒரு பவுன் ரூ.1,34,400 என்றளவில் உயர்ந்தது. ஒரு மாதத்துக்கும் குறைவான காலத்திலேயே தங்கம் விலை பவுனுக்கு ரூ.34,000 உயர்வு என்பது வரலாறு காணாத உச்சம்.

ஒப்பீட்டு அளவில், கடந்த 2025-ம் ஆண்டில் 12 மாதங்களில் பவுனுக்கு ரூ.40,000 அதிகரித்த நிலையில், 2026-ல் ஜனவரியில் மட்டும் பவுனுக்கு ரூ.34,000 உயர்வு என்றால், தங்கம் விலை அடுத்து என்னவாகும் என்ற அச்சம் பரவத் தொடங்கியது.

ஆனால், ஜன.30. ஜன.31, பிப்.2 என அடுத்தடுத்து மூன்று வர்த்தக நாட்களில் தங்கம் விலை ஒவ்வொரு நாளுமே பவுனுக்கு ரூ.7600 என்றளவில் குறைந்தது. அதாவது 3 நாட்களில் பவுனுக்கு ரூ.22,800 குறைந்தது.

விண்ணைமுட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டு, ஏறிய வேகத்திலேயே தங்கம் விலை குறைந்து வருகிறது. அதேபோல் வெள்ளி விலையும் வீழ்ச்சி கண்டு வருகிறது.

          

விலையேற்ற காலம்... - முன்னதாக, அமெரிக்க அதிபராக ட்ரம்ப் 2-வது முறையாக பொறுப்பேற்ற பிறகு வெளியிட்ட அறிவிப்புகள், குறிப்பாக, இந்திய இறக்குமதிப் பொருட்களுக்கு 50% வரி விதிப்பு, எச்1பி விசா கட்டணத்தை உயர்த்தியது, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு ஆகியவை தங்கம் விலை உயர்வுக்கு முக்கியக் காரணங்களாக அமைந்தன.

அதிலும் குறிப்பாக ஜனவரி மாதம் தங்கம் விலை உயர்வுக்கு ஈரானில் ஏற்பட்ட போர் பதற்றம், சர்வதேச பொருளாதார வீழ்ச்சி ஆகியனவற்றால் பெரும் முதலீட்டாளர்களின் பார்வை, பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தின் பக்கம் திரும்பியது காரணமாகக் கூறப்பட்டது.

ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக தங்கம் விலை 3 நாட்களில் பவுனுக்கு ரூ.22,800 குறைந்துள்ளது.

தங்கம், வெள்ளி விலை திடீர் குறைவுக்குக் காரணம் என்ன?

தங்கம், வெள்ளி விலை திடீர் சரிவுக்கான முக்கியக் காரணங்களாக சில அடுக்கப்பட்டாலும், அதில் முதன்மையானதாக ட்ரம்ப்பின் அறிவிப்பு ஒன்று குறிப்பிடப்படுகிறது.

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜெரோம் பாவெல் பதவிக் காலம் இன்னும் சில மாதங்களில் முடிவடையவுள்ள நிலையில் புதிய தலைவராக கெவின் வார்ஷை நியமிக்க ட்ரம்ப் முடிவு செய்துள்ளதே அந்தக் காரணம்.

ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்க வேண்டும் என்பதே ட்ரம்ப்பின் எதிர்பார்ப்பு. ஆனால் அதற்கு பாவெல் தொடர் முட்டுக்கட்டை போடுகிறார். இந்நிலையில், மே மாதம் புதிய தலைவராக பொறுப்பேற்கும் கெவின் வார்ஷ், அதிபர் ட்ரம்ப்பை போலவே ஃபெடரல் வங்கியின் வட்டியை 1% வரை குறைக்கும் கொள்கை கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், டாலரின் மதிப்பை உயர்த்தும் வகையில் கடுமையான நிதிக் கொள்கைகளை வார்ஷ் மேற்கொள்ளக்கூடும் என்ற எதிர்பார்ப்புகளும் நிலவுகின்றன.

கெவின் வார்ஷ்

இருந்தாலும், கடந்த கால வரலாற்றைப் புரட்டிப் பார்க்கையில், வார்ஷ் ஒரு ‘பணவீக்கப் பருந்து’ போலவே இருந்துள்ளார். அதாவது, பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்பதில் அவர் மிகவும் கவனமாக இருந்துள்ளார் என்பதால், அது அமெரிக்க சந்தைகளில் அதிர்வலையை ஏற்படுத்தியது.

வார்ஷ் ஃபெட் தலைவரானால், நீண்ட காலத்துக்கு வட்டி விகிதங்களில் மாற்றமிருக்காது, பணப்புழக்க நிலைமைகள் மேலும் இறுக்கமடையும் என்ற அச்சம் உருவானது.

இது ஒருபுறம் இருக்க, அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவானதால், தங்கம், வெள்ளி மீதான முதலீட்டில் குவிந்திருந்த முதலீட்டாளர்களின் கவனம் திசை திரும்பியுள்ளது.

தங்கம், வெள்ளி மூலமான லாபத்தை உறுதி செய்வதற்காக முதலீட்டாளர்கள் அவற்றை சிறிதளவு விற்கத் தொடங்கியுள்ளனர். இதுவும் விலை குறைவுக்கு காரணமாகக் கூறப்படுகிறது.

ஈரானுடன் அமெரிக்கா போரில் ஈடுபடலாம் என்ற பதற்றம் நிலவிவந்த நிலையில், ஈரான் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று வாஷிங்டன்னுக்கு தெரிவித்தது புவி அரசியல் பதற்றங்கள் ஒன்றில் சற்றே நிம்மதியை நல்கியுள்ளது. அதேபோல், நீண்ட காலமாக அமெரிக்க டாலரின் மதிப்பு சரிந்துவந்த நிலையில், அதுவும் மீண்டெழத் தொடங்கியுள்ளது.

இவ்வாறாக, தங்கம், வெள்ளி விலை சரிவுக்கு ஃபெடரல் வங்கி புதிய தலைவர், தங்கத்தை விற்கும் போக்கும், புவி அரசியலில் சலசலப்பு குறைந்தது எனப் பல காரணங்கள் கூறப்படுகின்றன.

“அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அரசின் செயல்பாடுகளால் தென் கொரியா, டென்மார்க் உள்ளிட்ட நாடுகள் டாலர் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக, பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் டாலரை விற்றுவிட்டு, தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கியதன் விளைவாக, “ஒரு மாத காலத்தில் மட்டும் தங்கம் விலை 25 சதவீதம் வரை உயர்ந்தது. அவ்வாறு வாங்கும் போக்கு சற்றே குறைந்திருப்பதும் தற்போதைய விலை வீழ்ச்சிக்கு காரணம்” என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த விலை குறைவு தொடருமா?

தங்கம், வெள்ளி விலை கடந்த 3 நாட்களாக குறையும் வேகத்தை வைத்து, இது மேலும் குறையுமா என்ற எதிர்பார்ப்பு சாமானியர்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், அது குறித்த நிபுணர்களின் பார்வை என்னவாக இருக்கிறது என்று பார்ப்போம்.

“தற்போதைய நிலவரப்படி தங்கம், வெள்ளி விலை குறைந்தாலும், அதன் விலையாதிக்கப் போக்கு முடிந்துவிட்டது என்று கூற முடியாது. புவி அரசியலில் வேறேதும் பதற்றம் ஏற்பட்டாலோ அல்லது De dollarisation எனப்படும் டாலருக்கு மாற்றான நாணயம் என்ற கோஷமும், அதை நோக்கிய செயல்பாடுகளும் வலுக்கும் போதோ மீண்டும் தங்கம் விலை அதிகரிக்கும்.

அதேபோல் வெள்ளிக்கான வணிக தேவை என்பது சோலார் பேனல், மின் வாகனங்கள் உள்ளிட்ட ‘கிரீன் எனர்ஜி’ தொழில் துறையால் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.

இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது தங்கம், வெள்ளி விலையேற்றக் காலம் முடிந்துவிட்டதாகக் கருதவே முடியாது.

இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கம் விலை ஒரு பவுன் ரூ.2 லட்சத்துக்கு அதிகமாகவும், வெள்ளி விலை ஒரு கிலோ ரூ.5 லட்சத்துக்கு அதிகமாகவும் விற்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

மேலும் தங்கம், வெள்ளி என்று இரண்டு உலோகங்களும் 2026-ல் முன் இப்போது இல்லாத அளவிலான ஏற்ற இறக்கங்களைக் காணலாம்” என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

தங்கத்தில் முதலீடு செய்யலாமா?

தங்கம், வெள்ளி விலை குறையும் / ஏறும்போது ஏற்படும் வழக்கமான சந்தேகம்தான் தங்கத்தின் மீது முதலீடு செய்யலாமா என்ற கேள்வி.

‘Rich Dad Poor Dad’ என்ற பிரபல புத்தகத்தை எழுதியவரும், முதலீட்டு ஆலோசகருமான ராபர்ட் கியோஸகி, தங்கம், வெள்ளி மீதான முதலீடு குறித்து தனது பார்வையை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர், “பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையேயான வித்தியாசம் ஒன்றைக் கூறுகிறேன். வால்மார்ட் ஏதேனும் கழிவு விலை விற்பனையை அறிவித்தால் ஏழை மக்கள் உடனே விரைந்து வாங்கிக் குவிக்கின்றனர். ஆனால், சந்தை மதிப்பு கொண்ட நிதி ஆதாரம் ஒன்று விலை வீழ்ச்சி கண்டால் ஏழை மக்கள் அதை விற்கின்றனர், பணக்காரர்கள் அதை வாங்குகின்றனர்.

தங்கம், வெள்ளி, பிட்காயின் சந்தை சரிந்துள்ளது. நான் இப்போது என் கையில் இருக்கும் பணத்தைக் கொண்டு இன்னும் கொஞ்சம் தங்கம், வெள்ளி வாங்கக் காத்திருக்கிறேன். இப்போது நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று வினவியுள்ளார்.

ராபர்ட் கியோஸகியின் சூசக பதிவைக் கொண்டு பார்த்தால் தங்கம், வெள்ளி விலை குறைந்தாலும் கூட அதன் மீதான முதலீடு ஆக்கபூர்வமானது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

அதேவேளையில், நமது நிதி நிலைமை, பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ப தனிப்பட்ட முறையில் நிதி ஆலோசகர்களை அணுகி, எந்த வகையில் முதலீடு செய்வது என்பது குறித்து சரியான வழிகாட்டுதல்களைப் பெற்ற பிறகு முடிவெடுத்து செயல்படுவது சாலச் சிறந்தது.

SCROLL FOR NEXT