வணிகம்

வெள்ளை அறிக்கை என்றால் என்ன? | ப்ளூ, கிரீன், பிங்க், மஞ்சள் பேப்பரும் சில குறிப்புகளும்

போத்தி ராஜ்.க

மாநிலத்தில், மத்தியில் ஒரு கட்சியின் ஆட்சி முடிந்த பிறகு புதிதாக ஒரு கட்சி ஆட்சியில் அமரும்போது, முந்தைய அரசு குறித்தும், மாநிலத்தின் நிலைமை குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிடுவோம் என்று கூறக் கேள்விப்பட்டிருக்கிறோம்.

ஒரு சிக்கலான விவகாரம், திட்டங்கள் குறித்து தெளிவான நிலைப்பாடு இல்லாத பட்சத்தில், அது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று அரசிடம் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தும்போதும், அது குறித்து கேள்விப்பட்டிருக்கிறோம்.

சரி, யாரெல்லாம் வெளியிடலாம்?

வெள்ளை அறிக்கை என்பதை அரசு மட்டும்தான் வெளியிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. பெரிய நிறுவனங்கள், சமூக அமைப்புகள், நடுத்தரமான தனியார் நிறுவனங்கள் கூட தங்களின் திட்டங்கள், எதிர்பார்ப்புகள், கடந்த கால நிர்வாகம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடும்.

இந்த வெள்ளை அறிக்கை என்பது இடத்துக்கு ஏற்ப பொருள் மாற்றி பயன்படுத்தப்படும். முதலீட்டிலும், அரசியலிலும், சமூகத்திலும், வளர்ச்சித் திட்டங்களிலும் இடத்துக்கு ஏற்ப அதன் அம்சம், பொருள் வேறுபடும்.

உண்மையில் வெள்ளை அறிக்கை (Whitepaper) என்றால் என்ன, அது ஏன் வெளியிடப்படுகிறது, அதன் முக்கியத்துவம் குறித்து சற்று தெளிவாகவும் சுருக்கமாகவும் பார்க்கலாம்.

வெள்ளை அறிக்கை என்றால் என்ன?

வெள்ளை அறிக்கை என்பது வேறொன்றும் இல்லை, ‘வெளிப்படைத் தன்மையாக இருக்கிறோம்’ என்பதை ஓர் அரசு, மக்களிடத்தில் தெரிவிப்பதுதான். அதாவது முந்தைய ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் நிதிநிலையை கையாண்ட விதம், திட்டங்களை செயல்படுத்திய விதம் குறித்து நடப்பு அரசால் வெளியிடப்படும் ஆழமான, தெளிவான பார்வையுடன் மக்களுக்கு அதிகாரபூர்வமாக அறிவிப்பதாகும். இதன் மூலம் அரசில் இருக்கும் சிக்கல்கள், எதிர்காலத்தில் சந்திக்க இருக்கும் பிரச்சினைகள், தீர்வு, செயல்முறை ஆகியவை விரிவாக மக்களிடம் தெரிவிப்பதாகும்.

வெள்ளை அறிக்கை எப்படி இருக்கும்?

ஓர் அரசு அல்லது தனியார் அமைப்பு, நிறுவனம் வெளியிடும் வெள்ளை அறிக்கை வெறும் விமர்சனங்களையும், குறைகளையும் மட்டும் சுட்டிக்காட்டுவதாக இருக்கக் கூடாது. மாறாக, தெளிவாகவும், தொழில் முறை சார்ந்த புள்ளிவிவரங்களையும், ஏற்கக் கூடிய விளக்கத்தையும் கொண்டிருக்கும்.

அரசு தற்போது சந்திக்க இருக்கும் சிக்கல்கள், நிதி ரீதியான பிரச்சினைகள், ஒவ்வொரு துறையிலும் சந்திக்க இருக்கும் சவால்கள், குறைகளைக் களைய வேண்டிய நடவடிக்கைகள், சிக்கல்களைத் தீர்க்கும் திட்டங்கள், தீர்வுகள் ஆகியவை குறித்தும் சுருக்கமாகக் குறிப்பிட்டிருக்கும்.

அரசு அல்லது ஒரு நிறுவனம் எந்த ஒரு முக்கிய விஷயத்தை மக்களிடம் சொல்ல வருகிறது, எதை பிரதானமாகக் குறிப்பிடுகிறது என்பதை குறிப்பிட வேண்டும். எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், ஆலோசனைகள், தீர்வுகள் குறித்தும் சுருக்கமாகக் குறிப்பிட்டிருக்கும்.

வெள்ளை அறிக்கை வரலாறு என்ன?

வெள்ளை அறிக்கை என்ற வார்த்தை 1446-ம் ஆண்டிலிருந்து ஆங்கிலத்தில் பயன்படுத்தப்பட்டு வருவதாக ஆக்ஸ்ஃபோர்டு அகராதி தெரிவிக்கிறது. ஆனால், அதிகாரபூர்வமாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 1922-ம் ஆண்டு அப்போது வின்ஸ்டன் சர்ச்சிலால் வெளியிடப்பட்டது. அதற்கு ‘சர்ச்சில் ஒயிட் பேப்பர்’ என்று பெயிரடப்பட்டிருந்தது.

பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழ் பாலஸ்தீனம் இருந்தபோது, அங்கு யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே நடந்த கலவரம் குறித்து அங்கு கவர்னராக இருந்த சர்ச்சில் வெள்ளை அறிக்கை வெளியிட்டார். இதுதான் முதன்முதலில் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையாகும்.

இதன்பின் உலக வரலாற்றில் பல்வேறு நாடுகளும் முக்கியமான பிரச்சினைகள், சிக்கல்கல் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளன. குறிப்பாக 1939 யூதர்கள் குறித்து பிரிட்டிஷ் நாடாளுமன்றம் வெளியிட்ட அறிக்கை, 1949-ல் சீனா - அமெரிக்கா உறவு குறித்து அமெரிக்கா வெளியிட்ட அறிக்கை குறிப்பிடத்தகுந்தவை.

ஏன் வெள்ளை வார்த்தை?

ஒரு விஷயத்தின் முழுமையை, ஆழமாக தெரிவிக்கவும், எதிர்காலம் குறித்த திட்டங்கள், சிக்கல்கள் குறித்து தெரிவிக்கவும் வெள்ளை அறிக்கை என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. இதற்கு வெள்ளை என்ற வண்ணம் ஏன் பயன்படுத்தப்படுகிறது? சிவப்பு, மஞ்சள், கருப்பு, பிங்க், பச்சை என்று சொல்லியிருக்கலாமே என்ற கேள்வி எழலாம்.

வெள்ளை அல்லது வெண்மை என்பது நீண்ட காலமாகவே தூய்மை, தெளிவு மற்றும் நடுநிலை ஆகியவற்றுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. அதனால்தான் வெள்ளை என்ற வார்த்தை பொருத்தப்பட்டுள்ளது.

வெள்ளை நிறம் உண்மைத் தன்மை, பாரபட்சமின்மையை குறிக்கிறது. குறிப்பிட்ட ஆவணத்தில் நடுநிலை தகவல்களும் பகுப்பாய்வுகளும் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, தனிப்பட்ட சார்புகள், மறைமுக நோக்கம் இன்றி, உண்மைத் தன்மையுடனும் ஆய்வு செய்து, தீர்வுகளையும், பரிந்துரைகளையும் நடுநிலை கண்ணோட்டத்தில் வைப்பதாக கருதப்படுவது வெள்ளை. வெள்ளை நிறம் நம்பகத்தன்மையையும் விசுவாசத்தையும் குறிப்பதாக வரலாற்று அறிஞர்கள் தெரிவிக்கிறார்கள்.

பல்வேறு துறைகளில் வெள்ளை அறிக்கை

அரசியலில் மட்டும் வெள்ளை அறிக்கை என்ற வார்த்தை பயன்படுவதில்லை. அறிவியல், தொழில்நுட்பம், கணிதம், மருத்துவம், இயற்பியல், தகவல் தொழில்நுட்பம், கணினிப் பொறியியல் உள்ளிட்ட துறைகளில் ஒரு குறிப்பிட்ட அம்சம் குறித்து தெளிவான அறிக்கை வெளியிட வெள்ளை என்ற வார்த்தை பயன்படுகிறது.

மேலும், தொழில் துறை, நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் ஆகியவற்றில் நிர்வாகம் மாறும்போதும், புதிய நிர்வாகம் பதவிக்கு வரும்போதும், கடந்த நிர்வாகம் குறித்த வரவு செலவு அறிக்கை, லாபம், இழப்பு, திட்டங்கள், சேமிப்பு ஆகியவை குறித்த தெளிவான அறிக்கைக்கும் வெள்ளை அறிக்கை என்ற வார்த்தை பயன்படுகிறது.

தமிழகத்தில் இதுவரை வெளியான வெள்ளை அறிக்கைகள்:

கடந்த 20 ஆண்டுகளில் தமிழக அரசால் இதுவரை 3 முறை அதிகாரபூர்வமாக மாநிலத்தித்தின் நிதி நிலவரம் குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2001-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில், அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவால், அதற்கு முந்தைய திமுக ஆட்சி குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

2021-ம் ஆண்டில் திமுக 10 ஆண்டுளுக்குப் பின் ஆட்சிப் பொறுப்பேற்றபின், முந்தைய அதிமுக ஆட்சி குறித்து நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளைய அக்கை தாக்கல் செய்தார்.

2026-ம் ஆண்டு தவெக ஆட்சிக்கு வந்தபின், மாநிலத்தின் நிதி நிலைமை, முந்தைய திமுக ஆட்சி குறித்து முதல்வர் விஜய் தலைமையிலான அரசு வெள்ளை அறிக்கை வெளியிட்டது. நிதியமைச்சர் மரிய வில்சன் அறிக்கையை தாக்கல் செய்தார்.

கிரீன் பேப்பர்

கிரீன் பேப்பர் (பச்சை நிறம்) என்பது கனடா, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஆஸ்திரேலியா, பிரிட்டன், அயர்லாந்து போன்ற நாடுகளின் அரசுகளால் வெளியிடப்படுகிறது. ஒரு மசோதா குறித்து அறிமுகம், கொள்கை குறித்த அறிமுகம் ஆகியவற்றுக்கும், அது குறித்த மக்களின் கருத்துக் கேட்புக்கும், ஆலோசனைகளுக்கும் பயன்படுகிறது. இந்த அறிக்கைக்கு பெரிதாக அதிகாரம் இல்லை.

ரெட் பேப்பர்

ரெட் பேப்பர் அல்லது ரெட் புக் எனப்படுவது பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டின்போது செலவினங்கள், திட்டங்கள், வரிகள், கடன் வாங்க வேண்டிய தேவைகள் குறித்து விரிவாக அறிவிப்பதாகும். இதற்கு ரெட் புக் என்றும் ரெட் பேப்பர் என்றும் அழைக்கப்படுகிறது.

ப்ளூ பேப்பர்

ப்ளூ பேப்பர் (நீலம்) என்பது ஒரு தொழில்நுட்பம் அல்லது ஒரு கருவி, இயந்திரம், கண்டுபிடிப்பு குறித்து விரிவான அறிக்கை வெளியிடதற்கு பெயர் ப்ளூ பேப்பராகும்.

யெல்லோ பேப்பர்

மஞ்சள் அறிக்கை என்பது ஆராய்ச்சி அல்லது கல்வி தொடர்பான இதழில் ஏற்கப்படாத அல்லது வெளியிடப்படாத ஆய்வு குறித்த ஆவணம். ப்ரீபிரின்ட் என்ற வார்த்தைக்கு ஒப்பான சொல்லாக இது பார்க்கப்படுகிறது.

பிங்க் பேப்பர்

அமெரிக்காவில் மாகாணங்களுக்கு இடையேயும், அரசுக்கும், மாகாணங்களுக்கு இடையே கொள்கைகள் தொடர்பான ஆவணங்கள் பரிமாற்றத்துக்கு பிங்க் பேப்பர் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.

SCROLL FOR NEXT