மும்பை: மும்பை மற்றும் தேசியப் பங்குச் சந்தைகளில் நேற்று நடைபெற்ற வர்த்தகம் கடும் சரிவைச் சந்தித்தது. மத்திய கிழக்கு நாடுகளில் போர்ப் பதற்றம், சர்வதேச சந்தைகளில் நிலவி வரும் நிச்சயமற்ற சூழல் காரணமாக, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் நேற்றைய வர்த்தகத்தின் போது 1,700 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. இதன் காரணமாக நேற்று ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.10 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.
ஈரான் - இஸ்ரேல் இடையே போர் தீவிரமடைந்து வருவதும், அதில் அமெரிக்காவின் தலையீடும் சர்வதேச முதலீட்டாளர்களைப் பெரும் கவலைக்கு உள்ளாக்கியுள்ளது. போர் சூழல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இது இந்தியாவின் பணவீக்கத்தை அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
மேலும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவாக 92-க்கும் கீழ் சரிந்ததும் சந்தையில் பலவீனமான சூழலை உருவாக்கியுள்ளது.
சென்செக்ஸ் 1,122.66 புள்ளிகள் சரிந்து 79,116.19-ல் நிலைபெற்றது. நிப்டி 385.20 புள்ளிகள் குறைந்து 24,480.50 புள்ளிகளில் நிலை கொண்டது. ஏழு மாதங்களுக்குப் பிறகு வர்த்தகத்தின் போது நிப்டி 24,400 என்ற நிலைக்குக் கீழ் சென்றது இதுவே முதல்முறையாகும்.