வணிகம்

காற்றாலை இறகுகள் கையாளுவதில் 30.43% வளர்ச்சியுடன் வ.உ.சி. துறைமுகம் அசத்தல்!

ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி: காற்றாலை இறகுகள் கையாள்வதில் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 30.43 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. இதன் மூலம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் முக்கிய மையமாக இத்துறைமுகம் உருவெடுத்து வருகிறது.

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகம் 2026- 2027-ம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் 3,000 காற்றாலை இறகுகளைக் கையாண்டுள்ளது. இது, 2025- 2026-ம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் கையாளப்பட்ட 2,300 காற்றாலை இறகுகளுடன் ஒப்பிடுகையில் 30.43 சதவீத வளர்ச்சியாகும்.

மேலும், காற்றாலை இறகுகளை ஏற்றி வந்த கப்பல்களின் எண்ணிக்கையும் 64-ல் இருந்து 70 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைக்குத் தேவையான உபகரணங்களைக் கையாள்வதில் வ.உ.சி துறைமுகத்தின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதை இது எடுத்துக்காட்டுகிறது.

2026- 2027-ம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில், காற்றாலை இறகுகள் மொத்த சரக்குப் போக்குவரத்தில் ஏற்றுமதி 59 சதவீதமாகவும், இறக்குமதி 41 சதவீதமாகவும் இருந்தது.

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட காற்றாலை இறகுகள் சீனா, ஜெர்மனி, ஸ்பெயின், டிரினிடாட், டொபாகோ மற்றும் தென் கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

அதேசமயம், இறக்குமதி செய்யப்பட்ட காற்றாலை இறகுகள் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் குஜராத் மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களுக்குப் பயன்படுத்துவதற்காகக் கொண்டு செல்லப்படுகின்றன.

இது குறித்து வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தின் தலைவர் சுசாந்த குமார் புரோஹித் கூறியது: “வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 2023- 2024-ம் நிதியாண்டில் 2,030 காற்றாலை இறகுகளைக் கையாண்ட நிலையில் 2024- 2025-ம் நிதியாண்டில் 2,635 இறகுகளையும், 2025- 2026-ம் நிதியாண்டில் 4,922 இறகுகளையும் கையாண்டுள்ளது. 2024- 2025-ம் நிதியாண்டைக் காட்டிலும் 2025- 2026-ம் நிதியாண்டில் 86.8 சதவீதம் அதிகமான இறகுகள் கையாளப்பட்டுள்ளன.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பான சரக்குகளின் போக்குவரத்து அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் சுங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வெளியே 1 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் பிரத்யேக திறந்தவெளி சேமிப்பு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், காற்றாலை இறகுகள் மற்றும் அவற்றோடு தொடர்புடைய உதிரிப் பாகங்களைச் சேமிக்கும் வகையில், சுங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஏற்கனவே 1.44 லட்சம் சதுர மீட்டராக இருந்த சேமிப்பு இடம் 1.50 லட்சம் சதுர மீட்டராக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதனுடன் துறைமுகத்தின் 5, 6 மற்றும் 7-ம் சரக்குத் தளங்களில் மொத்தம் 1 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் தளம் அமைக்கப்பட்ட இடவசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதிகள், பெரிய அளவிலான காற்றாலை இறகுகள் மற்றும் அவற்றோடு தொடர்புடைய உதிரிப் பாகங்களைச் சேமிக்கவும், கையாளவும் வசதியாக இருக்கும்.

பிரத்யேக சேமிப்பு வசதிகள், நகரும் பளுதூக்கி இயந்திரங்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் மூலம், பெரிய அளவிலான காற்றாலை உதிரிப் பாகங்களைத் திறம்படக் கையாள முடிகிறது” என்றார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT