ஓசூர்: வரலட்சுமி நோன்பை முன்னிட்டு மலர்களுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், ஓசூர் பகுதியில் சாமந்திப்பூ உள்ளிட்ட மலர்களின் விலை உயர்ந்துள்ளது. மலர் சாகுபடி பரப்பு குறைந்துள்ளதால் சந்தைக்கு வரத்து குறைந்துள்ள நிலையில், வெளிமாவட்ட வியாபாரிகளின் வருகையும் அதிகரித்துள்ளதால் வரும் நாட்களில் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
ஓசூர், பாகலூர், கெலமங் கலம், தளி, தேன்கனிக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் சாமந்திப்பூ, ரோஜா, செண்டுமல்லி உள்ளிட்ட பல்வேறு மலர்களை சாகுபடி செய்து வருகின்றனர். சந்தைத் தேவைக்கு ஏற்ப சுழற்சி முறையில் மலர் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இப்பகுதிகளில் அறுவடை செய்யப்படும் மலர்கள் ஓசூர், ராயக்கோட்டை மலர் சந்தைகளுக்கு விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன. அங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கும் வியாபாரிகள் மலர்களை அனுப்பி வருகின்றனர்.
ஆடிப் பண்டிகை, வரலட்சுமி நோன்பு, விநாயகர் சதுர்த்தி, ஆயுதபூஜை உள்ளிட்ட அடுத்தடுத்து வரும் பண்டிகைகளையொட்டி மலர்களுக்கான தேவை அதிகரிக்கும் என்பதால், ஓசூர் பகுதியில் சுமார் 3,500 ஏக்கர் பரப்பளவில் சாமந்திப்பூ, செண்டுமல்லி உள்ளிட்ட மலர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. நாளை (21-ம் தேதி) வரலட்சுமி நோன்பு அனுசரிக்கப்பட உள்ள நிலையில், சாகுபடி செய்யப்பட்டுள்ள சாமந்திப்பூக்களை அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்பும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, சென்னை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் ஓசூர் பகுதிக்கு நேரடியாக வந்து மலர்களைக் கொள்முதல் செய்து வருகின்றனர். இதனால், சந்தை யில் மலர்களுக்கான தேவை மேலும் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.160-க்கு விற்பனையான சாமந்திப்பூ, தற்போது ரூ.300 முதல் ரூ.400 வரை விற்பனையாகிறது. இதேபோல், கடந்த வாரம் ரூ.360-க்கு விற்பனையான குண்டுமல்லி தற்போது ரூ.1000-க்கும், ரூ.700-க்கு விற்பனையான கனகாம்பரம் ரூ.900-க்கும் விலை உயர்ந்துள்ளது.
மேலும், ரூ.260-க்கு விற்பனை யான அரளி தற்போது ரூ.300-க்கும், ரூ.190-க்கு விற்பனை யான சம்பங்கி ரூ.300-க்கும், ரூ.180-க்கு விற்பனையான ரோஜா ரூ.400-க்கும் விற்பனையாகி வருகிறது.
1,500 ஏக்கர் சாகுபடி பரப்பு குறைவு இதுகுறித்து மலர் விவசாயிகள் கூறியதாவது: ஆண்டுதோறும் ஆடி முதல் தை மாதம் வரை அடுத்தடுத்து இந்து பண்டிகைகள் வருவதால், சந்தையில் மலர்களுக்கான தேவை அதிகரிக்கும். பண்டிகை நாட்களின் விற்பனையை அடிப்படையாகக் கொண்டு ஓசூர் பகுதியில் சாமந்திப்பூ,செண்டுமல்லி, பன்னீர் ரோஜா, மரிக்கொழுந்து ஆகிய மலர்களை அதிக அளவில் சாகுபடி செய்துள்ளோம்.
வரலட்சுமி நோன்பை முன்னிட்டு சந்தையில் மலர்களுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், வழக்கமாக 5,000 ஏக்கர் பரப்பளவில் நடைபெறும் மலர் சாகுபடி, தற்போது 3,500 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே நடைபெறுகிறது. இதனால், மலர்களின் சாகுபடி பரப்பு 1,500 ஏக்கர் குறைந்து, சந்தைக்கு வரத்தும் குறைந்துள்ளது. அதே நேரத்தில், வெளிமாவட்ட வியாபாரிகளின் வருகையும் அதிகரித்துள்ளதால், மலர்களின் விலை உயர்ந்துள்ளது.
வரும் நாட்களில் பண்டிகை தேவை மேலும் அதிகரிக்கும் என்பதால், சாமந்திப்பூ உள்ளிட்ட மலர்களின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.