வணிகம்

இந்தியாவுக்கு 12.5% கூடுதல் வரி விதிக்க அமெரிக்கா திட்டம் - ‘கட்டாய உழைப்பு’ விதியை குறிப்பிட்டு ‘செக்’

பாரதி ஆனந்த்

இந்தியா உள்ளிட்ட 54 நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தற்போது இருக்கும் வரிகளையும் கடந்து, கூடுதலாக 10% முதல் 12.5% வரை புதிய வரிகளை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது.

அதாவது, அமெரிக்கா பட்டியலிடும் அந்த 54 நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் சில பொருட்கள் ‘கட்டாய உழைப்பு’ / கொத்தடிமை தொழிலாளர்கள் (Forced-labour) பயன்படுத்தப்படுவதாகக் கூறி, இந்த வரியை விதிக்க அமெரிக்கா ஆயத்தமாகி வருகிறது.

ஆனால், கட்டாய உழைப்பு ‘ஃபோர்ஸ்டு லேபர்’ என்ற குற்றச்சாட்டை இந்திய அரசு திட்டவட்டமாக மறுக்கிறது. மேலும், இந்த சர்ச்சை குறித்து இந்தியா - அமெரிக்கா வர்த்தக உடன்பாட்டு பேச்சுவார்த்தையின்போது ஆழமாக விவாதித்து முடிவு எட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

அமெரிக்​கா​வில் 2-வது முறை அதிப​ராக பதவி​யேற்ற ட்ரம்ப், பரஸ்பர வரி விதிப்பு முறையை கொண்டு வந்​தார். அமெரிக்​கப் பொருளா​தா​ரத்தை மீட்​டெடுக்​க​வும், வர்த்தகப் பற்​றாக்​குறையைக் குறைக்​க​வும் ட்ரம்ப் வரிகளை உயர்த்தினார். இறக்குமதி செய்​யப்​படும் அனைத்​துப் பொருட்​களின் மீதும் குறைந்​த​பட்​சம் 10% வரி விதிக்​கப்​பட்​டது. சர்வதேச அவசர கால பொருளாதார அதிகாரங்கள் சட்டத்தின் கீழ் இந்த வரி விதிக்கப்பட்டது.

ஆனால், அதிபர் ட்ரம்ப் விதித்த உலகளாவிய வரி விதிப்பு சட்​ட​விரோத​மானது எனக் கூறி, அமெரிக்க உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் இதை ரத்து செய்தது.

இந்நிலையில், அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் அமைப்பு (USTR -United States Trade Representative), கட்டாய உழைப்பு (ஃபோர்ஸ்டு லேபர்) வரிமுறையை அமல்படுத்துவது தொடர்பாக அரசுக்கு பல்வேறு யோசனைகளை வழங்கியுள்ளது. அது தொடர்பான தகவல்கள் தான் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

அது என்ன செக்‌ஷன் 301?

அமெரிக்க வர்த்தச் சட்டப் பிரிவு 301-ன் கீழ் (Section 301) உலகம் முழுவதும் 60 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள் அடிப்படையில் கொத்தடிமை / கட்டாய உழைப்புச் சுரண்டல் இருப்பதைக் கண்டறிந்ததாக யுஎஸ்டிஆர் கூறுகிறது. இத்தகைய கட்டாய உழைப்பு மூலம் உருவாகும் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளுடன் வர்த்தகம் செய்வது அமெரிக்காவின் வர்த்தகத்துக்கு மிகப் பெரிய பாரம் என்று யுஎஸ்டிஆர் கூறுகிறது.

யுஎஸ்டிஆர் அமைப்பின் தூதுவப் பிரதிநிதி ஜேமிசன் க்ரீர் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், “நம்முடன் வர்த்தக தொடர்பில் இருக்கும் மிக முக்கியக் கூட்டாளிகளிடம் இருந்து நாம் இறக்குமதி செய்யும் பொருட்களின் பின்னணியில் ‘கட்டாய உழைப்பு’ இருப்பது பற்றி சரியான நடவடிக்கை எடுக்காதது நமக்கு வர்த்தகப் பின்னடைவு. இது அமெரிக்க தொழிலாளர்கள் உலகளவில் ஒரு சமனற்ற போட்டியை எதிர்கொள்ளும்படியான நிர்பந்தத்தை உருவாக்கியுள்ளது. இந்த ஏற்றத்தாழ்வை இனிமேலும் பொறுத்துக் கொள்ள முடியாது” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், அமெரிக்காவில் ‘கட்டாய உழைப்பு’ குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள இந்தியா, இது தொடர்பான ஆய்வுகளை நிறுத்துவிட்டு ஏற்கெனவே நடந்துவரும் இருநாட்டு வர்த்தகப் பேச்சுவார்த்தையை ஒட்டியே இது பற்றியும் பேச வேண்டும் என்கிறது.

இது குறித்து, இந்தியாவில் இயங்கும் சர்வதேச வர்த்தக ஆய்வாளர்கள் தரப்பு, “யுஎஸ்டிஆர் தான் மேற்கொண்டதாகச் சொல்லும் ஆய்வையே இந்தியா நிச்சயமாக எதிர்க்கலாம். ஏனெனில் யுஎஸ்டிஆர் விசாரணை இந்திய ஏற்றுமதிகளில் கட்டாய உழைப்பு இருந்ததா என்பது பற்றியது அல்ல; மாறாக, இந்தியா வேறு இடங்களில் கட்டாய உழைப்புடன் தொடர்புடைய இறக்குமதிகளைத் தடுத்ததா, துணைபோனதா என்பது குறித்ததாகும்.

அமெரிக்காவின் இந்த வரி விதிப்பு உத்தியை வேறு கோணத்தில் தான் அணுக வேண்டும். இது அமெரிக்காவுக்கு உள்நாட்டில் நிலவும் பொருளாதார அழுத்தங்களின் விளைவு. எனவே, இந்தியா, செக்‌ஷன் 301 கீழ் பாயக்கூடிய நடவடிக்கைகளையும், இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தப் பிரச்சினையையும் தனித்தனியாகவே அணுக வேண்டும்” என்கிறது.

54 நாடுகளுக்கு வரி அச்சுறுத்தல்:

யுஎஸ்டிஆர் ஆய்வறிக்கையின்படி இந்தியா, சீனா, ஜப்பான், பிரேசில், ஆஸ்திரேலியா, பிரிட்டன், சவுதி அரேபியா உள்பட 54 நாடுகள் கட்டாய உழைப்பால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை ஏற்றுமதியாவதை தடுப்பதில் சரிவர செயல்படவில்லை. எனவே, இந்த நாடுகள் ஏற்கெனவே உள்ள இறக்குமதி வரியுடன் 12.5% கூடுதல் இறக்குமதி வரியை செலுத்த வேண்டியிருக்கும்.

ஆனால் கனடா, ஈகுவேடார், ஐரோப்பிய யூனியன் நாடுகள், இண்டோனேசியா, மெக்சிகோ, பாகிஸ்தான் போன்ற நாடுகள் கட்டாய உழைப்பு இறக்குமதியை தடுப்பதற்கான தங்களின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளன. மேலும், அமெரிக்காவுடன் பரஸ்பர வர்த்தகத்துக்கான முறையான ஒப்பந்தத்தில் (Agreement on Reciprocal Trade - ART) கையெழுத்திட சம்மதித்துள்ளன. எனவே, அவர்களுக்கு 10% வரியே விதிக்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது குறித்து க்ரீர், “அமெரிக்காவின் சில வர்த்தகக் கூட்டாளிகள் கட்டாய உழைப்பை தடுக்க சில ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளன. வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் அதற்கான உறுதியை அளித்துள்ளன. நமது ஒவ்வொரு வர்த்தகக் கூட்டாளியும் இதை உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் உலகளவில் கட்டாய உழைப்பு எனும் சுரண்டல் ஓயும்” என்று கூறியுள்ளார்.

ட்ரம்ப்பின் தந்திரம்

சீனாவின் பருத்தி விநியோகச் சங்கிலிகளில் உள்ள கட்டாய உழைப்பில், இந்தியாவும் ஓர் இடைத்தரகராக செயல்படுவதையும் யுஎஸ்டிஆர் அறிக்கை அடையாளம் கண்டுள்ளதாக அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறாக யுஎஸ்டிஆர் ஃபோர்ஸ்டு லேபர் போர்வையில் 12.5% வரியை முன்மொழிந்துள்ளது ட்ரம்ப் அரசின் வர்த்தக நடவடிக்கைகளை மீண்டும் கட்டமைப்பதற்கான முயற்சியாகவே பரவலாகப் பார்க்கப்படுகிறது.

அதேவேளையில், யுஎஸ்டிஆர் அதன் பரிந்துரைகளில் ஜவுளி இறக்குமதியில் சில தளர்வுகளை குறிப்பிட்ட சில நாடுகளுக்கு கொடுக்கலாம் என்று சிபாரிசு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல் எரிசக்தி துறை சார் பொருட்கள், அரிய கணிமவளங்கள், உலோகங்கள், மாட்டிறைச்சி, காபி, குறிப்பிட்ட சில காய்கறி, பழங்கள், மருந்து வகைகள், இயற்கை வேதிப் பொருட்கள் மற்றும் விமான உதிரிபாகங்களுக்கும் வரியில் சில தளர்வுகளை பரிந்துரைத்துள்ளதாக தகவல்.

இந்தியாவின் விளக்கம் என்ன?

அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதி அமைப்பு (யுஎஸ்டிஆர்) பரிந்துரைத்துள்ள இந்த வரி விதிப்பானது உறூதியானது அல்ல. சம்பந்தப்பட்டவர்கள் ஜூன் 22 வரை கருத்துக் கேட்புக் கூட்டங்களுக்கு கோரிக்கை வைக்கலாம்.

மேலும், இன்னொருபுறம் இந்தியா அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளது. கூடவே செக்‌ஷன் 301-ன் கீழ் கூடுதல் வரி விதிக்கும் முயற்சிகள் குறித்து விவாதித்து வருகிறது என இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. உலகளவில் இந்தியாவே அமெரிக்காவின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கூடுதல் வரிகளை இந்த ஆண்டு ஜூலை 7 முதல் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. கூடுதல் வரி விதிப்பு குறித்து பொதுமக்களின் கருத்துகளை அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி கோரியுள்ளது. இதற்கான எழுத்துப்பூர்வக் கருத்துக்களை சமர்ப்பிக்க ஜூலை 6 கடைசி நாளாகும். இதுகுறித்த பொது விசாரணையை ஜூலை 7 நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, இப்போதே இது குறித்து மிகுந்த அச்சம் தேவையில்லை. இந்த வரி விதிப்பு இறுதியானது அல்ல என்று தெரிவித்துள்ளது.

இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த ஓராண்டில் கடுமையாகச் சரிந்துள்ளது. ஈரான் - அமெரிக்கா போர் இதில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது.

அந்நியச் செலாவணி இருப்பை உறுதி செய்ய , மே 22-ம் தேதி​யுடன் முடிவடைந்த 2 வாரங்​களில், ரிசர்வ் வங்கி சுமார் 1,200 கோடி டாலர் மதிப்​புள்ள தங்​கத்தை விற்​பனை செய்திருக்​கலாம் என்று செய்திகள் வெளியாகின. அதை ரிசர்வ் வங்கி ஆதாரங்களோடு மறுத்திருந்தலும் கூட 12.5% வரி விதிப்பு என்ற ஆலோசனைகளே புதிய அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT