வணிகம்

அமெரிக்கா - ஈரான் மோதல் தீவிரம்: கச்சா எண்ணெய் தட்டுப்பாடு அபாயம்

செய்திப்பிரிவு

டெஹ்ரான்: அமெரிக்கா, ஈரான் இடையே தீவிர போர் நடைபெற்று வரும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல் போக்குவரத்து முடங்கி உள்ளதால் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் அமெரிக்கா, ஈரான் இடையே போர் நடைபெற்று வந்தது. பல்வேறு திருப்பங்களுக்குப் பிறகு கடந்த ஜூன் 17-ம் தேதி இரு நாடுகள் இடையே தற்காலிக அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்பிறகு தங்கள் எல்லையை ஒட்டி ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே எண்ணெய் கப்பல்கள் கடந்து செல்ல வேண்டும் என்று ஈரான் ராணுவம் கட்டுப்பாடு விதித்தது.

இதை மீறி ஓமன் கடல் வழியாக சென்ற எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதன்காரணமாக தற்காலிக அமைதி ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த 8-ம் தேதி அறிவித்தார். இதன்பிறகு அமெரிக்கா, ஈரான் இடையே தீவிர போர் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியின் இரு புறத்தையும் அமெரிக்க போர்க்கப்பல்கள் முற்றுகையிட்டு உள்ளன. ஈரான் தலைநகர் டெஹ்ரான் மற்றும் அந்நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ராணுவ தளங்கள், ஏவுகணை, ட்ரோன் உற்பத்தி ஆலைகள், துறைமுக பகுதிகளை குறிவைத்து அமெரிக்க போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்தன. அமெரிக்க தாக்குதலில் ஈரானில் இதுவரை 35 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடியாக குவைத்தில் உள்ள அமெரிக்க விமானப் படைத் தளத்தை குறிவைத்து ஈரான் ராணுவம் நேற்று ஏவுகணைகளை வீசியது. மேலும் ஜோர்டான், பஹ்ரைன், இராக், குவைத் நாடுகளில் உள்ள அமெரிக்க விமானப் படைத் தளங்கள் மீது ஈரான் ராணுவம் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது.

அத்துடன், வளைகுடா நாடுகளின் உள்கட்டமைப்புகளை அழித்து தரைமட்டமாக்குவோம் என்று ஈரான் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியா, சீனா உட்பட பல்வேறு ஆசிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போதைய போரால் ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல் போக்குவரத்து முடங்கி உள்ளது.

எனினும், சவுதி அரேபியாவில் இருந்து செங்கடலின் பாப் அல் - மண்டேப் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் தொடர்ந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த பிராந்தியத்தில் உள்ள ஏமனின் பெரும்பகுதியை ஹவுத்தி கிளர்ச்சிப் படை ஆட்சி செய்கிறது.

ஈரான் ராணுவத்தின் கைப்பாவையாக செயல்படும் ஹவுத்தி படை செங்கடலின் பாப் அல் - மண்டேப் ஜலசந்தியை முழுமையாக மூட முயற்சி செய்வதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய், எரிவாயு, உரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் எழுந்திருக்கிறது.

SCROLL FOR NEXT