வணிகம்

ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா ‘தற்காலிக’ அனுமதி!

வேட்டையன்

புதுடெல்லி: ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு 30 நாட்கள் விலக்கு அறிவித்துள்ளது அமெரிக்கா. இருப்பினும், இதில் சில கட்டுப்பாடுகள் இந்த அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது. அது குறித்து விரிவாக பார்ப்போம்.

ஈரான் மீது அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேல் போர் தொடுத்​துள்​ள​தால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்​றம் ஏற்​பட்டு சர்வதேச அளவில் கச்சா எண்​ணெய் விநி​யோகம் பாதிக்​கப்​பட்​டுள்​ளது. இதனால் கச்சா எண்​ணெய் விலை அதி​கரித்து வரு​கிறது.

இந்தப் போர் தொடர்ந்தால் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வரும் நாடுகளில் வரும் நாட்களில் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

          

இந்நிலையில், கடலில் சரக்கு கப்பலில் உள்ள ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா தற்காலிக அனுமதி அளித்துள்ளது.

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தற்போது வாங்கும் கச்சா எண்ணெய் சரக்கு (கார்கோ) பெட்டகத்தில், அமெரிக்கா இப்போது அறிவித்துள்ள தற்காலிக அனுமதிக்கு முன்னதாக ஏற்றப்பட்டு இருக்க வேண்டும். அதேபோல, அமெரிக்காவின் வரி ஏற்ற அறிவிப்பின் காரணமாக மற்ற நாடுகளுக்காக ஏற்றுமதி செய்யப்பட்டு, கடலில் தேக்கம் அடைந்திருக்கும் ரஷ்ய கச்சா எண்ணெய் சரக்குகளையும் இந்தியா இப்போது வாங்கலாம் என சில கட்டுப்பாடுகளையும், நிபந்தனைகளையும் அமெரிக்கா அறிவித்துள்ளது.

ரஷ்யா - இந்தியா - அமெரிக்கா: கச்சா எண்ணெய் பின்னணி

உக்​ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்​த​தால், ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் இறக்​குமதி செய்​வதை ஐரோப்​பிய நாடு​கள் நிறுத்தின. இந்​தியா தொடர்ந்து மலிவு விலை​யில் கச்சா எண்ணெய் வாங்கியது. இது உக்​ரைன் மீதான போருக்கு ரஷ்யாவை ஊக்​கு​விப்​ப​தாக இருக்கும் என்று இந்​தி​யா​வுக்கு கூடுதல் வரி விதித்தார் ட்ரம்ப்.

ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் இறக்​குமதி செய்​வதை நிறுத்த வேண்​டும் என்ற நிபந்​தனை அடிப்படையில் இந்தியாவுக்கான வரியை 18 சதவீத​மாக அமெரிக்கா குறைத்த​து, இதையடுத்து கடந்த சில வாரங்​களாக ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வதை இந்​தியா குறைத்​தது.

ரஷ்​யா​விடம் இருந்து இந்​தியா நேரடி​யாகவோ அல்​லது மறை​முக​மாகவோ கச்சா எண்​ணெய் வாங்​கு​வது கண்​டு​பிடிக்​கப்​பட்​டால், அமெரிக்கா 25 சதவீத கூடு​தல் வரியை மீண்​டும் விதிக்​கும் எனவும் கூறப்​பட்​டது குறிப்பிடத்தக்கது. தற்போது இதில்தான் இந்தியாவுக்கு விலக்கு அறிவித்துள்ளது அமெரிக்கா.

இதனிடையே, இந்​தி​யா​வுக்கு கச்சா எண்​ணெய் விநி​யோகம் செய்ய ரஷ்யா எப்​போதும் தயார் என்று இந்​தி​யா​வுக்​கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலி​போவ் கூறி​யுள்​ளதும் கவனிக்கத்தக்கது.

SCROLL FOR NEXT