புதுடெல்லி: இந்தியாவில் யுபிஐ பயனர்களின் எண்ணிக்கை சுமார் 55.49 கோடியை எட்டியுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நொடிப் பொழுதில் டிஜிட்டல் முறையில் சாமானியர்கள் தொடங்கி அனைத்து தரப்பினரும் பணத்தை பெறவும், அனுப்பவும் உதவுகிறது யுபிஐ பேமென்ட். இது வணிகர்கள், வாடிக்கையாளர்கள் என அனைவருக்கும் சாதகமானதாகவும் உள்ளது. நகரம் முதல் கிராமம் வரை அனைத்து இடங்களிலும் யுபிஐ செயல்பாட்டில் உள்ளது. இதனால், ரொக்கத்தின் பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளது.
கூகுள் பே, போன் பே, பேடிஎம், அமேசான் பே, BHIM என பல்வேறு செயலிகளின் மூலம் இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. நாளுக்கு நாள் இதன் பயனர்கள் மற்றும் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் நடப்பு ஆண்டின் ஜூன் மாத தகவலின் படி நாட்டில் யுபிஐ பயனர்களின் எண்ணிக்கை சுமார் 55.49 கோடியை எட்டியுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை நாடாளுமன்றத்தில் எழுத்து பூர்வமாக மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி வெளியிட்டார். என்பிசிஐ தரவுகளின் அடிப்படையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2025-26 நிதியாண்டில் யுபிஐ வாயிலாக மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 24,161.69 கோடி என்றும், அதன் மதிப்பு ரூ.314.23 லட்சம் கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2024-25 நிதியாண்டில் யுபிஐ பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 18,586.60 கோடியாகவும், அதன் மதிப்பு ரூ.260.56 லட்சம் கோடியாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
யுபிஐ பரிவர்த்தனை மிகவும் பாதுகாப்பானதாகவும், வெளிப்படைத் தன்மையோடும் இருக்க காலத்துக்கு ஏற்ப பல்வேறு முன்முயற்சியை மத்திய அரசு, ரிசர்வ் வங்கி மற்றும் என்பிசிஐ மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், யுபிஐ சேவை உலக முழுவதும் 13 நாடுகளில் (இந்தியாவையும் சேர்த்து) பயன்பாட்டில் உள்ளது. இவ்வாறு மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரியின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.