சென்னை: தனது தந்தையின் சொத்துகளில் தனக்கு சம பங்கு வழங்கப்பட வேண்டும் என டிவிஎஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசனின் மகள் லட்சுமி வேணு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
டிவிஎஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசனின் மகளான லட்சுமி வேணு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதில், வேணு சீனிவாசனுக்கு சொந்தமான கூட்டுக் குடும்பச் சொத்துகளைப் பிரித்து, தனக்குச் சேர வேண்டிய பங்கை வழங்கக் கோரியுள்ளார்.
கடந்த நவம்பர் 16 அன்று, தனது தந்தை வேணு சீனிவாசனிடம், சொத்துகளை நியாயமாகவும் சட்டப்பூர்வமாகவும் பிரித்து வழங்கக் கோரி லட்சுமி வேணு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
வேணு சீனிவாசனுக்கு சொந்தமான சொத்துகளில் டிவிஎஸ் மோட்டார் கம்பெனி, சுந்தரம் கிளேட்டன், டிவிஎஸ் கிரெடிட் சர்வீசஸ் மற்றும் டிவிஎஸ் ஹோல்டிங்ஸ் ஆகியவற்றில் உள்ள பங்குகள் அடங்கும். டிவிஎஸ் மோட்டார்ஸ் கம்பெனியின் முக்கிய உரிமையாளராக லட்சுமி வேணுவின் தம்பி சுதர்சன் வேணு 2025-ல் அறிவிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, லட்சுமி வேணு இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.
முக்கிய உரிமையாளராக சுதர்சன் வேணு அறிவிக்கப்பட்டுள்ளதால், டிவிஎஸ் ஹோல்டிங்ஸ் நிறுவத்தின் கீழ் உள்ள வணிகங்களில் பெரும்பகுதி அவருக்குச் செல்லக்கூடும் என்பதால், லட்சுமி வேணு சட்டப்படி தனக்குரிய பங்கை கோரி நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
லட்சுமி வேணுவின் கோரிக்கைக்கு அவரது தாயாரான மல்லிகா சீனிவாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “ஒரு தாயாக என்னைப் பொறுத்தவரை, மகனும் மகளும் எல்லா வையிலும் சமமானவர்களே.
குடும்பச் சொத்துகளில் லட்சுமிக்கு நியாயமான பங்கு உண்டு என்பதிலும், அது சுதர்சனின் பங்குக்கு எந்த வகையிலும் குறைவானதல்ல என்பதிலும் நான் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
பிரபல தொழில்முனைவோரான மல்லிகா சீனிவாசன், உலகின் மிகப்பெரிய டிராக்டர் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டஃபே (TAFE) நிறுவனத்துக்கு தலைமை வகிக்கிறார். லட்சுமி டஃபே நிறுவனத்தின் துணைத் தலைவராக உள்ளார். அவரது சகோதரர் சுதர்சன், டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவராகவும் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றுகிறார்.