திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அருகில் புதிதாக கட்டப்பட்டு வரும் பல்நோக்கு வணிக மையம். | படம்: ர.செல்வமுத்துகுமார் |

 
வணிகம்

‘மாற்றம்’ காணும் திருச்சி மாநகரம் - மல்டி பிளக்ஸ் முதல் ஷாப்பிங் மால்கள் வரை!

அ.சாதிக் பாட்சா

திருச்சி: திருச்சி மாநகரம் மிக வேகமாக வளர்ந்துவருவதை பறைசாற்றும் வகையில், ஷாப்பிங் மால்கள், மல்டி பிளக்ஸ் திரையரங்குகள் உள்ளிட்ட பெரும் வணிக வளாகங்கள் பல அடுத்தடுத்து உருவாகி வருகின்றன.

திருச்சி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் காட்டூர்- திருவெறும்பூர் இடையே ஒரே நேரத்தில் 6 திரைப்படங்கள் திரையிடும் வசதி கொண்ட மல்டி பிளக்ஸ் திரையரங்கம் மற்றும் வணிக வளாகம் விரைவில் திறக்கப்பட உள்ளது.

இந்த திரையரங்கம் தமிழகத்தின் முதலாவது டால்ஃபி ஆடம்ஸ் சவுண்ட் சிஸ்டம் வசதி கொண்ட திரையரங்கமாக உருவாகி வருகிறது. மேலும், இங்கு ஃபுட் கோர்ட், வணிக நிறுவனங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் அமைய உள்ளன.

          

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சீவி நகர் அருகே 3.9 லட்சம் சதுரடி பரப்பளவில், திரையரங்கம், ஃபுட் கோர்ட், ஹைப்பர் மார்க்கெட், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் ரூ.140 கோடியில் பாரத் மால் எனும் திருச்சியின் முதலாவது ஷாப்பிங் மால் கட்டப்பட்டு வருகிறது.

இதே சாலையில் நெ.1 டோல்கேட் அருகே 2.2 லட்சம் சதுரடியில் 9 தளங்கள் கொண்ட ஷாப்பிங் மால் அமைய உள்ளது. இங்கு 3 திரைகள் கொண்ட மல்டி பிளக்ஸ் திரையரங்குகள், உணவகம், ஃபுட் கோர்ட், ஹைப்பர் மார்க்கெட், பல்வேறு பிராண்ட் நிறுவனங்களின் கடைகள் அமைய உள்ளன. நாராயணா குழுமம் இந்த ஷாப்பிங் மால் கட்ட ஏற்பாடுகள் செய்து வருகிறது.

மேலும், சமயபுரம் டோல் பிளாசா அருகே தனியார் பொறியியல் கல்லூரி அருகே ஒரு லட்சம் சதுரடி பரப்பளவில் மல்டிபிளக்ஸ் திரையரங்கு, உணவகம், வணிக நிறுவனங்கள், பார், நீச்சல் குளம், பொழுது போக்கு அம்சங்களுடன் அமைய உள்ளன.

திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை ஒட்டி திருச்சி மாநகராட்சி சார்பில் 5.2 ஏக்கர் பரப்பளவில், ரூ.144.58 கோடி செலவில் 3 லட்சம் சதுர அடி பரப்பளவில் தரை தளம் மற்றும் 4 தளங்கள் கொண்ட பல்நோக்கு வசதி மையம் எனும் சில்லறை விற்பனை கடைகள், உணவகங்கள், பொழுதுபோக்கு இடங்கள், பிற அடிப்படை சேவைகள் கொண்ட வணிக வளாகம் பார்க்கிங் வசதியுடன் கட்டப்பட்டு வருகிறது.

இதன் கட்டுமானப் பணிகள் 90% முடிவடைந்துள்ளன. இந்த வணிக வளாகத்தை பொது-தனியார் கூட்டு முயற்சியில் ஷாப்பிங் மால் ஆக இயக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. திருச்சி -புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி சர்வதேச விமான நிலையம் அருகே மொரைய்ஸ் சிட்டியில் 5 லட்சம் சதுரடி பரப்பளவில் ஒரு மால் உருவாகப்போகிறது.

தேசிய மற்றும் சர்வதேச அளவிலான பிராண்டுகளின் விற்பனை நிலையங்கள், சினிமா திரையரங்குகள், உணவகங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள், 24 மணிநேர பாதுகாப்பு வசதி மற்றும் பார்க்கிங் வசதிகள் கொண்டதாக இந்த மால் இருக்கும்.

இதுவரை பெரிய அளவிலான மால்களே இல்லாத திருச்சி மாநகரில் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் 5-க்கும் மேற்பட்ட மால்கள் வரிசையாக வந்து திருச்சி மாநகர மக்களை திக்குமுக்காட வைக்க இருக்கின்றன.

SCROLL FOR NEXT