புதுடெல்லி: மொபைல் டேட்டா தேவையில்லாத பயனர்களுக்கு நிவாரணம் அளிக்கும் விதமாக, தொலைபேசி மற்றும் எஸ்எம்எஸ் சேவைக்கு மட்டும் குறைந்த கட்டணத்தில் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் உத்தரவிட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு தேவையில்லாத இணையதள டேட்டாவை இணைத்து அதிக விலைக்கு ரீசார்ஜ் செய்ய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டாயப்படுத்தியது குறித்து புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இனி அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளை மட்டும் கொண்ட திட்டங்களை கட்டாயம் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும்.
டேட்டா திட்டங்களுக்கு வழங்கப்படுவதைப் போலவே, 30 நாட்கள் அல்லது ஒவ்வொரு மாதமும் புதுப்பிக்கும் வகையிலான ரீசார்ஜ் திட்டங்களாக அவை இருக்க வேண்டும் என்று டிராய் தெரிவித்துள்ளது. இதையடுத்து, அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி சேவைகளை டேட்டாவில் இருந்து தனியாகப் பிரிப்பதன் மூலம், பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான சேவைக்கு மட்டுமே பணம் செலுத்தும் சூழல் இனி உருவாகும்.