சென்னை: தமிழகத்தில் சிறப்பு வாட் வரி சமாதான திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்று நிதியமைச்சர் மரிய வில்சனிடம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் எஸ்.சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஜிஎஸ்டி வரி அமல்படுத்துவதற்கு முன்பிருந்த தமிழ்நாடு வாட் வரி, மத்திய விற்பனை வரி விதியின்கீழ் தற்போது சுமார் 7 ஆயிரம் வணிகர்கள் பல்வேறு கட்டங்களிலான வரி நிலுவை வழக்குகள் மற்றும் மறு ஆய்வு நடைமுறையை தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றனர்.
பல ஆண்டுகளாக தொடரும் வழக்கு களால் வணிகர்கள் தொழில் முடக்கத்தையும், பொருளாதார நெருக்கடியையும் சந்தித்து வருகின்றனர். அண்மையில் கேரள அரசு நிதி மசோதாக்கள் மூலமாக பழைய வாட் வரி நிலுவைகளுக்கான சிறப்பு சமாதான திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
இதன் மூலம் அசல் வரியில் சலுகை, வட்டி மற் றும் அபராதங்களில் 100 சதவீதம் விலக்கு அளிப்பது என முடங்கி கிடந்த வழக்குகளை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர். எனவே தமிழகத்திலும் சிறப்பு வாட் வரி சமாதான திட்டத்தை அறிவிக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.