புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நியூசி லாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, இரு நாடுகளுக்கும் இடையில் தடையற்ற வர்த்தகம் இறுதி செய்யப்பட்டதாக அவர்கள் கூட்டாக அறிவித்தனர்.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:”நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனை திங்களன்று (நேற்று) பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினார். அப்போது இருநாடுகளுக்கும் இடையே வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பரஸ்பரம் பயனளிக்கும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வெற்றிகரமாக இறுதி செய்யப்பட்டது குறித்து இரு நாடுகளின் தலைவர்களும் கூட்டாக அறிவித்தனர்.
கடந்த மார்ச் மாதம் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, இதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கின. இந்த நிலையில், 9 மாத காலத்திற்குள் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது என்பது இருநாட்டு குறிக்கோள்களை பிரதிபலிப்பதுடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும் உதவிடும் என இரு தலைவர்களும் தெரிவித்தனர்.
இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின் பொருளாதார நடவடிக்கைகள் வலுவடைய வழிவகுக்கும். அத்துடன், மேம்பட்ட சந்தை வாய்ப்புகள், முதலீடுகளுக்கான உத்வேகம், வலுவான உத்திசார் ஒத்துழைப்பு போன்றவற்றுக்கும் வகை செய்யும்.
இரு நாடுகளையும் சேர்ந்த புதுமை கண்டுபிடிப்பாளர்கள், தொழில் முனைவோர், விவசாயிகள், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு துறைகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்க இந்த ஒப்பந்தம் பெரிதும் உதவும்.
இரு நாடுகள் இடையே வலுவான மற்றும் நம்பகத்தன்மையுடன் கூடிய அடித்தளம் உருவாகும். வரும் 5 ஆண்டுகளுக்குள் இரு தரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்குவதற்கும், அடுத்த 15 ஆண்டுகளுக்குள் நியூசிலாந்தில் இருந்து ரூ.1.80 லட்சம் கோடி அளவிற்கு இந்தியாவில் முதலீடு செய்வதற்கும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கல்வி, விளையாட்டு, மக்கள் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்தவும் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
இரு நாடுகளின் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது எனவும் அவர்கள் கூட்டாக முடிவு செய்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.