படம்: இரா.கார்த்திகேயன்

 
வணிகம்

அரசு அடுக்குமாடி குடியிருப்புகள் ‘காலி’யாக இருப்பது ஏன்?

இரா.கார்த்திகேயன்

நகர்ப்புற மக்களின் தேவைக்கேற்ப சென்னையை போன்று, தமிழ்நாட்டின் மாநகர பகுதிகளில் பல்வேறு இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கட்டி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியால் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழைமக்கள் அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழ்வதற்காக அடுக்குமாடி குடியிருப்புகள் உருவாக்கப்பட்டன. இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரும்பாளி பகுதியில் கட்டப்பட்ட 430 அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட வீடுகளில், இதுவரை 130 பேர் மட்டும் முழு பங்களிப்புத் தொகையை செலுத்தி குடியேறி உள்ளனர். எஞ்சிய 300 வீடுகள் கடந்த பல மாதங்களாக காலியாக உள்ளன.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் ஏராளமான மக்கள் வீட்டுமனைக்கும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் விண்ணப்பித்து காத்திருக்கின்றனர்.

திருப்பூர் மாவட்டம் தொழில் நகரம் என்பதால், இங்குள்ள தொழிலாளர்களின் உச்சபட்ச கனவு சொந்த வீடு தான். இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் தெக்கலூரில் அடுக்குமாடி குடியிருப்பு சுமார் ரூ.ஒன்றரை லட்சம் என்றால், வீரபாண்டி பகுதியில் உள்ள குடியிருப்பின் விலை வேறு மாதிரியாக இருக்கும். தற்போது பல்லடம் பெரும்பாளியில் பங்களிப்புத் தொகை ரூ.3 லட்சத்து 9 ஆயிரத்து 200 என்பதால், பலரும் முழுத்தொகையை ஒரே தவணையில் செலுத்தி, குடியேற முடியாத நிலையில் உள்ளனர்.

அவர்கள் பாதித்தொகை செலுத்தினால், எஞ்சிய தொகைக்கு கடன் வசதி செய்து தந்தால் அனைவரும் பயன்பெறுவார்கள். அதேபோல் குடியிருப்பு சங்கங்கள் மூலம் தொடர்ச்சியாக அடுக்குமாடி குடியிருப்பில் குப்பை எடுப்பது தொடங்கி, சாக்கடை கால்வாய் தூர்வாருவது மற்றும் பிற அடிப்படை விஷயங்களை தொடர்ச்சியாக செய்தால்தான் குடியிருப்பு முழு சுகாதாரத்துடன் இருக்கும். இதில் அரசு அதிகாரிகள் முழு கவனம் செலுத்த வேண்டும், என்றனர்.

திருப்பூர் நகர்ப்புற மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறும்போது, “பல்லடம் பெரும்பாளியில் 300 வீடுகள் காலியாக உள்ளன. பல்லடம் பகுதியில் 700 பேர், அடுக்குமாடி குடியிருப்பில் வீடு கேட்டு விண்ணப்பித்துள்ளனர். ஆனால் பங்களிப்புத்தொகை ஒரே தவணையாக யாரும் முழுமையாக செலுத்தாததால், இன்னும் குடியேறவில்லை. முழுத்தொகை செலுத்திய 130 பேர் தற்போது குடியிருந்து வருகிறார்கள். பங்களிப்புத்தொகை ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு தொகையில் இருக்கும்” என்றனர்.

SCROLL FOR NEXT